-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label Astrology Research. Show all posts
Showing posts with label Astrology Research. Show all posts

Monday, January 12, 2015

நவக்கிரக வழிபாடு தேவையா?

நவக்கிரகங்களை வழிபடலாமா?

வேண்டாம்.
ஏன் என்பதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு கேள்வி.
வேலை செய்பவர்களுக்கு என்ன அழகு?  சொன்ன வேலையை திறம்பட குறித்த நேரத்தில் முடித்துத் தருவது.
நன்கு திறம்பட வேலையை முடித்துத் தர என்ன தெரிந்திருக்க வேண்டும்? நன்றாக வேலைபார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.
அப்படி ஒழுக்கமாக நியாயமாக வேலைசெய்பவரை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஓயாமல் தொந்தரவு செய்து கொண்டிருப்பது சரியா?
தவறு என்றால் நவக்கிரகங்கள் சுதந்திரமாக செயல்பட தயவு செய்து வழிபாடு என்ற பெயரில் தொந்தரவு செய்யாதீர்கள்.

நன்றும் தீதும் பிறர் தர வாரா. இது இயற்கையின் தத்துவம் கிரகங்கள் உங்களின் முன்வினைப் பயனுக்கேற்ப இப்பிறவியில் நீங்கள் அடைய இருக்கும் சுக துக்கங்களுக்கான சூழ்நிலைகளை உருவாக்கக் கடமைப் பட்டவர்கள். அவர்களை சுதந்திரமாக வேலை செய்ய அனுமதியுங்கள்.

ஜோதிடம் இயற்கை. யாவருக்கும் பொதுவானது. உங்களின் சுக துக்கங்கள் உங்களை மட்டும் பாதிக்காது. உங்களோடும் உங்களின் செயல்களோடும் தொடர்புடைய அனைவரையும் பாதிக்கிறது. நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால் அது உங்களின் புண்ணியம் மட்டுமல்ல. உதவி பெற்றவரோடைய அதிர்ஷ்டமும் அதில் அடங்கியுள்ளது. மழை பொழிய வேண்டுபவர்கள் மத்தியில் வேண்டாம் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அப்படியென்றால் இயற்கை யாருக்கு சாதமாக அமையும். இயற்கை என்பது நவக்கிரகங்களின் தூண்டுதலால் செயல்படுகிறது. வெப்பத்திற்கு சூரியன் என்றால் குளிர்ச்சிக்கு சந்திரன். யோகத்திற்கு குரு என்றால் போகத்திற்கு செவ்வாய், சுக்கிரன். பேரின்பத்திற்கு கேது என்றால் சிற்றின்பத்திற்கு ராகு. எல்லோருக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை புதன் என்றால் யாருக்கும் வளையாமல் நடுநிலையோடு பலன் தரும் சனி.  இப்படி நவக்கிரக்கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான். நன்மை தீமை இரண்டும் சேர்ந்து தான் வாழ்க்கை. வாழப் பழகிக் கொள்ளுங்கள். அனுபவங்கள் வேண்டாம் என்று முடிவு செய்தால் வாய்ப்புகளை இழக்க வேண்டி வரும்.

இயற்கையை மாற்ற முயலுவது முடியாத காரியம் மட்டுமல்ல கூடாத காரியமும் கூட. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை அனுபவிக்க பழகிக் கொள்வோம். பிறகு ஏன் ஜோதிடம் தெரிந்து கொள்ள வேண்டும் ? ஜோதிடத்தால் என்ன பலன்?

தொடர்வோம்...

Thursday, June 20, 2013

ஜோதிடக் குறிப்புகள்

ஜோதிடத்தை முழுமையாக தெரிந்து கொண்டவர்கள் தற்காலத்தில் யாரும் இருப்பதாகாத் தெரியவில்லை. ஆனால் விடாமுயற்சியாலும் தீராத தேடுதலாலும் நல்ல எண்ணங்களாலும் ஜோதிடத்தை அதிகமாக உணர்ந்தவர்கள் இருக்கிறார்கள். தேடுதல்களுக்கான விடைகள் யார் மூலமாவது எப்படியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் தேடுகின்றோம். அப்படி தேடுபவர்களுக்கு உதவியாக தெரிந்ததை உணர்ந்ததை யாம் எழுதி வருகிறோம். அவற்றின் சிறு தொகுப்பாக இந்தப் பதிவு. 

விதியை வெல்ல முடியாது. அதற்கு பரிகாரங்களும் கிடையாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று கிடையாது.ஆனால் அதை எவ்வாறு நாம் அனுபவிக்கப் போகிறோம் என்பது தான் ஜோதிடம் கூறும் சூட்சுமம். மேலும்...


மூலம் ஆயில்யம். நட்சத்திரங்களால் பெண்களின் புகுந்த வீட்டிற்கு தீங்கு வருமா?

 

வராது. ஒருவருடைய வாழ்க்கையின் முழுப்பங்கும் அவருடைய ஜாதகத்தை வைத்தே கணிக்கப் படுகிறது. மேலும் சாதாரண நிலையில் அடுத்தவர்களின் இராசியோ நட்சத்திரமோ மற்றவர்களிடம் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. எப்பொழுது இருவருக்கும் இடையில் ஒரு பிடிப்பு, ஒரு பந்தம், ஒரு உறவு ஏற்படுகின்றதோ அப்பொழுது தான் ஒருவரின் ஜாதகம் மற்றவர்க்கு பயன்படுகிறது. தொடர்ந்து…

 

தொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்

 

ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய தொழிலிருந்து தான் கிடைக்கப் பெறும். வெற்றி என்பது என்ன? நாம் செய்யும் செயல்கள் நாம் எதிர்பார்த்த விளைவுகளைத் தருமானால் அது வெற்றி. அது தான் மனிதனின் சந்தோசம், மகிழ்ச்சி. மனிதன் மகிழ்ச்சியுடன் வாழத் தேவைப்படும் அனைத்தையும் தொழிலின் மூலமே பெறுகிறோம். பிறந்த குழந்ததையின் தொழில் என்ன? உண்ணுவதும் உறங்குவதும் தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு அது தான் தொழில். தேர்ச்சி பெறுவது தான் வெற்றி. மேலும்…



ஜனனத்திற்கு முந்தைய நிலையிலிருந்து மரணத்திற்கு பிந்தைய நிலைவரை ஜோதிடத்தில் கூறமுடியும். அப்படிக் கூறுவதற்கு உண்மையான பக்தி இருக்க வேண்டும். பக்தி என்பது இறைவனிடம் மட்டும் தான் என்பதில்லை. தன்னைத் தான் உணர்தலே இறைவனை அடைவதற்குச் சமம். சாமானிய மக்கள் தான் இறைவனைத் தேடி ஓடுகின்றனர். தன்னை உணர்ந்தவனிடம் இறைவன் தானே வந்து சேர்கிறான். தொடர்ந்து….

 

Friday, March 29, 2013

நீச பங்கம் என்பது என்ன?

இராசி என்பது ஒருவருக்கு கிடைக்க இருக்கும் இலாப நட்டங்களைப் பற்றி எடுத்துக்கூறுவது ஆகும்.  உச்சம் பெற்ற கிரகம் தன்னுடைய பாவ பலத்தை முழுமையாக நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளது.

எந்த ஒரு கிரகமும். தான் இருக்கும் இடத்தில் தான் இருக்கும் நிலைக்குரிய செயல்களைச் செய்யும். அதில் எந்த மாற்றமும் இல்லை. மற்ற கிரகங்களின் தாக்கங்களினால் விளைவுகளில் மாற்றம் இல்லை ஆனால் மற்ற கிரக பலன்களும் இணையும் போது மாற்றம் நிகழ்வது போலத் தோன்றும்.

உச்சம் என்பதும் நீசம் என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான். இரு நிலைகளிலும் நன்மையும் உண்டு. நன்மை அல்லாததும் உண்டு. நீச பங்கம் மற்ற கிரகங்களின் நற்பார்வையாலும் சேர்க்கையாலும் நடைபெறுவது என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது  . ஆனால் நீசபங்கம் என்று ஒன்று இல்லை. 

நீசம் பெற்ற கிரகம் தன்னுடைய கடமையைக் கண்டிப்பாக செய்தே தீரும். நீச பங்கம் பெறுவது என்பது மற்ற நல்ல கிரகங்கள் தொடர்பினால் கிடைக்கும் நன்மை தான். ஆனால் அது நீசம் பெற்ற கிரகத்தால் நடப்பதில்லை. அதனுடன் தொடர்புடைய மற்ற கிரகங்களின் வலிமையால் நடப்பது ஆகும்.

Monday, January 21, 2013

வாழ்வியல் தடைகளும் – ஜோதிடத்தீர்வுகளும்

வாழ்வியல் தடைகளும் – ஜோதிடத்தீர்வுகளும்

ஒருவர் திருப்தியாக வாழ்வதற்கு தடையாக இருக்கும் அனைவற்றிற்கும் காரணம் அவரே தான் முற்பிறவியில் செய்த வினைப்பயனை அனுபவிக்கவே இப்பிறவி எடுக்கிறோம். கடந்த பிறவியிலேயே முழுவதும் அனுபவித்திருந்தால் இப்பிறவி ஏற்பட்டிருக்காது. சரி. இப்பொழுது பிறந்துவிட்டோம். பிரச்சனைகளும் வந்து விட்டது எப்படி தீர்வு காண்பது?

ஒருவருக்கு நிகழக்கூடிய விளைவுகளை மட்டும் ஜோதிடம் கூறவில்லை. அதற்குரிய விடைகளையும் கொடுத்துள்ளது. நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உதாரண ஜாதகம்
ரிசப இலக்கினம் – துலாம் இராசி 


இவரின் முதல் கேள்வி – எனது மனம் உறுதியான நிலையில் இல்லை. இது தான் இவரின் பிரச்சனை. ஆனால் இது தான் இவரின் பலம். தன்னுடைய பலவீனம் என்ன என்பதைத் தெரிந்தவன் தான் தன்னுடைய பலத்தையும் உணரமுடியும்.

இந்த நிலை ஏன் என்பதற்கு ஜோதிடம் கூறும் காரணம். இலக்கினத்திற்கு 6ல் சந்திரன். சந்திரன் மனதைக் குறிக்கும் கிரகம். ஆறாம் இடம் மறைவு, நோய், வழக்கு இது போன்றவற்றைக் குறிக்கும் இடம். ஆறாம் இடத்தில் சந்திரன். மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுமாற்றம் வரத்தான் செய்யும். ஆனால் இவருக்குத்தான் அது முன்னேற்றத்தின் தடைக்கல்லாக அமைந்துவிட்டது.

சந்திரன் மட்டும் தான் காரணமா?
எப்பொழுது தைரியம் குறைகிறதோ அப்பொழுது மனம் தடுமாற்றம் அடையும். பயம் உண்டாகும். எதையும் உறுதியுடன் செய்ய தயங்குவோம். தேவையில்லாமல் சந்தேகம் கோபம் வரும். தைரியம் தரும் பாவம் 3ம் பாவம் அங்கு இருக்கும் செவ்வாய் நீசம். நீசம் பெற்ற செவ்வாய் 4ம் பார்வையாக மனோகாரன் சந்திரனைப் பார்க்கிறது. தேவையான தைரியம் இல்லாதால் மனம் குழப்பத்தில் உள்ளது. 

மனத்தடுமாற்றம் உள்ள அனைவருக்கும் என்ன தான் தீர்வு. வாழ்க்கை முழுவதும் இதே நிலைதானா? இதற்குத் தீர்வு இல்லையா? 

இருக்கிறது. அதுவும் ஜோதிடத்திலிருந்துதான் கிடைக்கப்  பெறப்போகிறோம். முடிவு எடுக்கும் திறனை வளர்த்துக்கொண்டால் இந்த பிரச்சனையை சமாளித்துவிடலாம். எப்படி வளர்த்துக் கொள்வது.? நம்மால் ஒரு செயல் செய்ய முடியாத பொழுது, அச்செயலை செய்ய தகுதியுடைய ஒருவரின் மூலமாக நாம் செய்து கொள்கிறோம். அதே போலத்தான் நம்முடைய முடிவை மற்றொருவரின் மூலமாக செய்து கொள்ளலாம். அப்படி யார் மூலம் நமக்கு ஆதாயம் வரும்?

ஜாதகத்தில் சூரியன் ஆட்சி. புதன் ஆட்சி. சனி உச்சம். இப்படி வலுவான கிரகங்கள் உள்ளன. இதில் சனியும் சூரியனும் பலம் பெற்றவையாக உள்ளன. சூரியன் தந்தைக்குரிய கிரகம். பொதுவாக தலைமைப் பண்பு கொண்ட கிரகம் நல்ல நிலையில் இருப்பதால் உங்களின் முடிவுகளை அவரிடம் கேட்டு நடப்பது சிறந்தது. சுக்கிரன் – மனைவிக்கு காரகர். அவர் சூரியனுக்கு அடுத்த நல்ல நிலையில் உள்ளார். மனைவியின் ஆலோசனை நம்பிக்கையைத் தரும். நண்பர்களின் ஆலோசனை நல்ல அனுபவத்தைத் தரும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் நன்றாக சிந்திக்கக்கூடியவர் தான். ஆனால் நிதானம் மட்டும் கொஞ்சம் குறைவாக இருக்கும். காரணம் புத்தி காரகன் புதன்- ஆட்சி ஆனால் வக்கிர நிலை. இதை நிவர்த்தி செய்ய உங்களை நீங்கள் புரிந்து கொள்ள தினசரி நடப்பவற்றை டைரியில் எழுதுங்கள் அப்பொழுது உங்களின் சிந்தனை என்ன தவறு எங்கே நடக்கிறது என்பது புரிய வரும். உங்கள் முடிவுகளை ஞாயிற்றுக்கிழமைகளில் (சூரியனுக்கு உகந்த நாள்) அமைதியாக இருக்கும் சூழ்நிலையில் எடுத்தால் வெற்றி நிச்சயம். சந்திராஷ்ட தினங்களில் கவனமாக இருங்கள். தினமும் உங்கள் வாழ்க்கையில் உங்களால் நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து பெருமைப்படுங்கள். அது நடந்த சூழ்நிலை அதை தாங்கள் நடத்திய விதம் இவற்றை நினைத்துப் பார்த்தால் தங்களின் கேள்விகளுக்கு விடை தானாக கிடைத்துவிடும்.

Wednesday, January 16, 2013

ஜோதிட ஆராய்ச்சி - பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.

ஜோதிட ஆராய்ச்சி - பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.

மனித வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் அனைத்துச் செயல்களையும் 12 பாவங்களாகப் பிரித்துவிடமுடியும். அந்த 12 பாவங்களின் நாயகர்களாக 9 கோள்களை நியமித்துவிட முடியும் இது தான் ஜோதிடத்தின் கரு.

ஜனனத்திற்கு முந்தைய நிலையிலிருந்து மரணத்திற்கு பிந்தைய நிலைவரை ஜோதிடத்தில் கூறமுடியும். அப்படிக் கூறுவதற்கு உண்மையான பக்தி இருக்க வேண்டும். பக்தி என்பது இறைவனிடம் மட்டும் தான் என்பதில்லை. தன்னைத் தான் உணர்தலே இறைவனை அடைவதற்குச் சமம். சாமானிய மக்கள் தான் இறைவனைத் தேடி ஓடுகின்றனர். தன்னை உணர்ந்தவனிடம் இறைவன் தானே வந்து சேர்கிறான்.

அப்படி இறையருளையும் தன்னகத்தே கொண்ட ஞானிகளால் உணரப்பட்டதே ஜோதிடம். அப்படிப்பட்ட ஞானிகளில் ஒருவர் தான் பிருகு முனிவர். அவர் தனது திவ்ய திருஷ்டியால் உருவாக்கி அருளியதே இந்த ஜோதிட முறை. அவற்றை எளிமைப் படுத்தி ஜோதிட ஆர்வலர்கள் பலரும் எழுதி வைத்துள்ளனர்.

சப்தரிஷி ஜோதிட ஆராய்ச்சி மையம் ஆங்கிலத்தில் எழுதிய கருத்துக்களை எடுத்து தமிழில் கொடுத்துள்ளேன். விதிகள் மட்டுமே மற்றவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம் அது பொதுவானது. ஆனால் அதன் மீதான ஆராய்ச்சியை தனித்தனியாகத்தான் மேற்கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் விடைகள் மீதான தெளிவு பிறக்கும்.
கருத்துக்களை மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம். காரணம் எடுத்துக்காட்டு ஜாதகங்கள் அதன் விளைவுகள் எல்லாம் மிகச் சிறிய அளவிலானது தான். அனைவரும் பங்கெடுத்து ஆராய்ந்தால் மிகத் துல்லிய பலன்களைக் கூற முடியும்.
பிருகு சரல் பத்ததியின் மூலம் எந்தெந்த வயதில் எந்தெந்த கிரகங்களின் தாக்கங்களினால் என்ன நடக்கக் கூடும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். அவற்றில் சில.


விதி – 6
ஜெனன ஜாதகத்தில் செவ்வாய் எங்கிருக்கிறாரோ அவரிடமிருந்து எண்ண வரும் 10ம் பாவ பலன்களில் ஒன்று ஜாதரின் 27ம் வயதில் நடைபெறும்.

விதி 8– இராகு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 6ம் பாவ பலன்களின் ஒன்றை ஜாதகரது 38ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 9– கேது பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 12ம் பாவ பலன்களின் ஒன்றை ஜாதகரது 24ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 10-குரு பகவான் தான் இருக்கும் இடத்தின் பாவ பலன்களில் ஒன்றையோ அல்லது தனது 9ம் பார்வையின் பாவ பலன்களில் ஒன்றையோ ஜாதகரின் 40ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 11-குரு பகவான் தனது 5ம் பார்வையின் பாவ பலன்களில் ஒன்றையோ அல்லது 5ம் பாவத்திற்கு 3ம் பாவமான 7ம் பாவத்தின் பலன்களில் ஒன்றையோ ஜாதகரின் 32ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 12–சனி பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 3ம் பாவ பலன்களின் ஒன்றை ஜாதகரது 20ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 17– இராகு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்தோ அல்லது தான் இருக்கும் இடத்திலிருந்து 9ம் பாவ பலன்களின் ஒன்றையோ ஜாதகரது 37ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 18– குரு பகவான் தான் இருக்கும் இடத்தின் பலன்களின் ஒன்றை ஜாதகரது 69ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 19-குரு பகவான் தனது 9ம் பார்வையின் பாவ பலன்களில் ஒன்றை ஜாதகரின் 22ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 21-இராகு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5ம் பாவ பலன்களில் ஒன்றை ஜாதகரின் 22ம் வயதில் நடத்தி வைப்பார்.

இந்த விதிகளின் மீதான ஆராய்ச்சியை இனி தொடரலாம்.