-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label எழுத்து எனும் வேள்வி. Show all posts
Showing posts with label எழுத்து எனும் வேள்வி. Show all posts

Sunday, August 11, 2019

எழுதினால் என்ன கிடைக்கும்

எழுதினால் என்ன கிடைக்கும்.

எல்லாம் கிடைக்கும். புகழ், பணம், பதவி இப்படி நேர்மறையாகவும் கிடைக்கும் விமர்சனம், அவமானம், அவமரியாதை இப்படியும் கிடைக்கக்கூடும். ஆனால் இவையெல்லாம் உங்கள் எழுத்துக்கள் பொதுவெளியில் பார்க்கப்பட்டால் தான். ஆனால் இங்கே குறிப்பிடப்படும் எழுதுதல் என்னும் செயல் திரும்பி வராத பலனைக் கொடுக்கக்கூடிய செயலாக அமைய வேண்டும்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு எதிர்வினை உண்டு என்று இயற்கை உணர்த்திவருகிறது. நாம் செய்யும் செயலுக்கு எப்படி ஒரு பலன் கிடைக்கிறதோ, அதேபோலத் தான் நாம் அனுபவிக்கும் செயலுக்கும் ஒரு வினை இருந்திருக்க வேண்டும். இதைத்தான் விதி என்கிறோம். காலம் அனைத்து நிகழ்வுகளையும் தன் நினைவகத்தில் வைத்துள்ளது. காலத்தின் சட்டதிட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. காரணம், சட்டத்தை எழுதுவது நாம் தான். அவரவர்களுக்குரிய சட்டத்தை அவரவர் தான் நிர்ணயிக்கிறார்கள். அது தான் விதி. அந்த விதிப்படி நடப்பதும் நடக்க மறுப்பதும் நாம் தான். அது தான் நம் செயல்கள்.

ஒரு செயலை, மிகச் சரியான செயல் என்று என் ஆழ்மனம் அங்கிகரிக்குமானால் அது தான் அந்த செயலுக்கான என்னுடைய சட்டம்.  நீரோட்டத்தோடு செல்வது தான் மிகச் சரி என்று என் ஆழ்மனம் சொல்லுமானல் அது தான் என்னுடைய சட்டம். எந்தச் சூழ்நிலைகளிலும் நான் அதை மாற்றிச் செய்யக்கூடாது. நீரோட்டத்தை எதிர்த்து போராடலாம் என்று என் ஆழ்மனம் கட்டளையிட்டால் அதன் படி நடப்பது சட்டத்தின் படி நடப்பது ஆகும்.

ஆழ்மனம் .. அப்படியென்றால்...

தொடர்வோம்.....

Thursday, October 11, 2018

என் எதிரியை நான் எப்படி வெல்வது

நம்மையும் நம்மைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளையும் புரிந்து கொண்டால் எதிரிகளை எளிதில் இனம் காண முடியும்.

எதிரிகள் மனிதர்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதல்ல. கொடிய எண்ணங்களும்  எதிரிகள் தான்.  சோம்பேறித்தனமும் மூடப் பழக்கவழக்கங்களும் கூட எதிரிகள் தான்.   அதிகப்படியான தன்னம்பிக்கையும் கூட ஒரு வகை எதிரிதான்.  வெற்றி என்பது அடுத்தவரை வெல்வது அல்ல. தன்னை வெல்வதே வெற்றி.  நம் குறைகளை நாமே உணர்ந்து திருத்திக் கொண்டால் அதுவே நாம் பெறும் மிகப் பெரிய வெற்றி.
நம்முடைய மகிழ்ச்சி நம் கையில் தான் உள்ளது. நம்முடைய எழுத்து நம்மை வழி நடத்தும். நம்முடைய எழுத்து நம்மை வெற்றி பெறச் செய்யும்.

 தத்துவமெல்லாம் கேட்பதற்கு சரியாகத் தான் இருக்கும். நடைமுறை வாழக்கையில் பயன் படுத்த முடியுமா?, 

ஏன் முடியாது. 

எழுத்துக்கள் தான் இன்று உலகை ஆண்டுகொண்டிருக்கின்றன.  எழுத்துக்களால் தான் மொழி வலிமை பெறுகிறது.  முன்னொரு காலத்தில் நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை எழுத்துக்கள் தான் உணர்ததுகின்றன.

முயற்சி செய்.
எழுது.
நிச்சயம் வெற்றி பெறுவாய்.
உன் எழுத்து உனக்கு துணை நிற்கும். 
சத்தியத்தின் படி எழுது.
உண்மையை மட்டும் எழுது.
மனதில் எழுவதை அப்படியே எழுது.

மிக முக்கியமான ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கே குறிப்பிடப்படும் எழுதுதல் என்னும் செயல் திரும்பி வராத பலனைக் கொடுக்கக்கூடிய செயலாக அமைய வேண்டும்.  அதனால் உங்களின் எழுத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு அதிக பின்னுாட்டங்களைப் பெற்று விடலாம் என்று எண்ணி விடாதீர்கள். அதுவல்ல நம் நோக்கம்.  நம்மை நாம் உணர்ந்து நமது எதிரிகளை அழித்து நாம் நினைத்த வெற்றியைப் பெற நாம் செய்யும் வேள்வி தான் இந்த எழுத்து.

எனக்கு உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் கூட நேரம் போதவில்லை.. இந்நிலையில் நா்ன் எப்படி எழுதுவது...


Monday, October 8, 2018

யார் எனக்கு எதிரி - எழுத்து எனும் வேள்வி

யார் எனக்கு எதிரி.

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க என்ன  செய்ய வேண்டும்? கிடைப்பதை அனுபவிக்க வேண்டும். அல்லது அனுபவித்தது போன்று கற்பனையாவது செய்ய வேண்டும். அந்தக் கற்பனை சுவையாக இருக்க அதை எழுதிப் பார்க்க வேண்டும்.  உங்கள் மனதில் நீங்கள் எதிர்பார்த்த இந்த உலகம் கிடைத்து விட்டால் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவீர்கள் என்பதை முதலில் நீங்கள்  அனுபவிக்க வேண்டும். பிறகு தான் அதனை அடுத்தவர்களுக்கு அறியப்படுத்த முடியும். 

“இப்பிரபஞ்சம் முழுவதும் என் சொல்படி நடக்க வேண்டும். நான் தான் என்றென்றும் மகா சக்கரவர்த்தியாக இருக்க வேண்டும்.  அனைத்தும் என் விருப்பப்படியே நடக்க வேண்டும்.  எல்லாம் சரி தான்.  இவையெல்லாம் எப்படி சாத்தியமாகும்.? இந்த நிலைக்கு வர நான் என்ன செய்ய வேண்டும்?. “
ஒன்றும் செய்ய வேண்டாம். நீங்கள் வெற்றி பெற தடையாக இருக்கிற எதிரிகளை அழித்துவிடுங்கள். எப்படி முடியும்.? உங்கள் எண்ணங்களால் அது சாத்தியமாகும்.  உங்களின் எழுத்துக்களால் அது சாத்தியமாகும். 

மனதிற்குள் கற்பனை செய்யும் போது கனவு கானும் போது, உங்களின் எண்ணங்கள் எங்கெங்கோ பறந்து விரிந்து ஓடத்துவங்கிவிடும். ஆனால் எழுதும் போது அவை  பக்குவப்படுத்தப்படும். ஒரு எழுத்தை எழுதுவதற்கும் மற்றொரு எழுத்தை எழுதுவதற்கும் இடையே உள்ள சனப்பொழுதில் எழுத்து மெருகேறிவிடும். ஏற்கனவே எழுதப்பட்டது சரிபார்க்கப்படும். அடுத்து எழுத இருக்கும் எழுத்து பக்குவப்படுத்தப்படும். எண்ணங்கள் துாய்மை பெறும்.


முதலில் உங்களின்  இலக்கு என்ன என்பதை தெளிவாக உணருங்கள். எவ்வளவு காலத்திற்குள் அதை அடைய வேண்டும் என்பதை தீர்மானம் செய்த கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி பெற என்னென்ன வேண்டும் என்பதை பட்டியலிடுங்கள். இறுதியாக உங்களின் எதிரிகள் யார் யார்  என்பதை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.  அனைத்தையும் எழுதுங்கள்.

உங்களின் எதிரி யார் என்பதை எப்படி கண்டு கொள்வது...

வேள்வி தொடரும்...








Sunday, June 10, 2018

எழுத்து எனும் வேள்வி - நான் என்னால் புகழடையப் போகிறேன்

எழுத்து எனும் வேள்வி - நான் என்னால் புகழடையப் போகிறேன்

என்னை நான் தான் புகழ் பெறச் செய்ய முடியும். என்னை விட என்மேல் அக்கறையும் நலனும் கொண்டவர்கள் யாருமில்லை.  என்னைப் புகழ்பெறச் செய்ய நான் எடுக்கும் முயற்சி தான் “எழுத்து எனும். வேள்வி“

ஒவ்வொரு நிகழ்வும் நம் மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த தாக்கத்தை நாம் பிரதிபலிக்கின்றோம்  சொற்களாக,  செயல்களாக, எண்ணங்களாக அதை நாம் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். நம்மைப் பாதிக்கும் நிகழ்வுகளை நாம் அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டால் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. நாம் உண்மையில் மகிழ்ச்சியாகவே இருப்போம். கிட்டத்தட்ட பற்றற்ற நிலை. ஆம். யார் யாருடனே சண்டையிட்டால் நமக்கென்ன. தேர்தலில் யார் வெற்றி பெற்றால் நமக்கென்ன. துணையும். பிள்ளையும் நம் சொல்படி கேட்காவிட்டால் நமக்கென்ன. பயணத்தில் பக்கத்தில் இருப்பவன் யாருடனோ கேட்கத் தகாத வார்த்தைகளை பேசினால் நமக்கென்ன. இப்படி ஏகப்பட்ட நமக்கென்ன என்று இருந்துவிட்டால், உண்மையில் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் அதுவா வாழ்க்கை. எதற்காகவோ பிறந்து விட்டோம். யாரையும் தொந்தரவு செய்யாமல் வாழவேண்டுமே தவிர யாருக்கும் உபயோகமில்லாமல் வாழக்கூடாது.

சரி இதற்கும் எழுத்துக்களுக்கும் என்ன தொடர்பு?

தொடர்பு உண்டு. எப்படி? நம்முடைய எண்ணங்கள் நம்மை விட்டு வெளியேற வேண்டும். அப்பொழுது தான் மனம் சுத்தமாகும். படிப்பில் நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற எண்ணம் படிப்பு என்கிற செயலாக வெளியே வரவேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உழைப்பாக விடா முயற்சியாக வெளியே வர வேண்டும். ஆனால் நம்முடைய, நம்மைவிட, பலமான எதிரியை அழிக்க நாம் என்ன செயலைச் செய்துவிட முடியும்.  நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலை நமக்குத் தொடர்பில்லாத ஒருவர் செய்யும் பொழுது வரும் உணர்வை நமக்கு துளியளவும் பாதிப்பு ஏற்படாதவாறு எப்படி வெளியேற்ற முடியும்.  அதற்குத்தான் எழுதுங்கள். உங்களின் எண்ணங்களின் வடிகாள் உங்களின் எழுத்து. எண்ணக்குமுரல்களை மனதிலேயே  வைத்திருந்தால் அது ஒரு நாள் வெடித்துச் சிதறி உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளோரையும் அழிக்கக்கூடும்.  அதை அடுத்தவர்களிடம் கூறினால் அதன் பிரதிபலிப்பு உங்களையே வந்தடையும். நீங்கள் எழுதியதை அடுத்தவர்கள் படித்து பாராட்ட வேண்டுமென்பதல்ல அதன் குறிக்கோள். உங்களின் எழுத்து உங்களுக்கு புகழையும் பொருளையும் தரவேண்டுமெனில்  அதை நிச்சயம் வெளிப்படுத்தியே ஆகவேண்டும். ஆனால் இங்கே எழுதுங்கள் என்பது எதையும் பெறுவதற்காக அல்ல. இருப்பதை இழப்பதற்காக. மனதில் உள்ள தீராத காயங்களை கோபங்களை வெறுப்புகளை இப்படி எதையெல்லாம் இழக்க வேண்டுமோ அதைத் தான் எழுதுங்கள். உங்களை நீங்களே துாய்மைப் படுத்திக்கொள்வதற்காகத் தான் இந்த  வேள்வி.

உங்களுடைய கையெழுத்திற்கும் எண்ணங்களுக்கும் தொடர்பு உண்டு. மகிழ்சியான தருணங்களில் உங்களின் கையெழுத்து மற்ற நாட்களைவிட அழகாக இருக்கும். அதேபோல நீங்கள் அழகாக எழுதினால் உங்களின் எண்ணமும் நிச்சயம்  அழகுறும்.  எப்படி எழுதுவது...
எழுதுவதற்குப் பதில் கணினியிலோ அல்லது செல்போனிலோ டைப் செய்து விட்டால் என்ன என்றால் அது தவறு. இங்கே நீங்கள் எழுதுவது உங்களின் கருத்துக்களை பதிவு செய்ய அல்ல. மிக முக்கியமான ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கே குறிப்பிடப்படும் எழுதுதல் என்னும் செயல் திரும்பி வராத பலனைக் கொடுக்கக்கூடிய செயலாக அமைய வேண்டும்.  விதியை அனுபவித்தல் ஒன்றே விதியை வெல்ல மிகச் சரியான வழி. அதனால் உங்களின் எழுத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு அதிக பின்னுாட்டங்களைப் பெற்று விடலாம் என்று எண்ணி விடாதீர்கள். அதுவல்ல நம் நோக்கம். பின்விளைவுகளைத் தராத செயல் தான் வேண்டும்.  நீங்கள் எழுதியதை நீங்களே திரும்பப் படிக்க வேண்டியதில்லை. எழுதி முடித்தவுடன் கிழித்து எரித்து விட வேண்டியது தான். உடனே கிழிக்க மனமில்லையென்றால் சிறிது காலம் யார் கண்ணிலும் படாமல் பாதுகாத்து பின் அழித்து விட வேண்டும்.

உங்களுடைய இந்த எழுத்தை நீங்கள் பாதுகாத்து வைத்திருந்தால் இயற்கை அதற்குரிய பலனை நிச்சயம் தரும். அந்தப் பலன் நற்பலனா? தீய பலனா? என்பது உங்களின் எண்ணங்களைப் பொருத்தது.  நற்பலனை மட்டும் அனுபவிக்க என்ன செய்யக்கூடாது...

விடைகள் ஒவ்வொன்றாக வரும்.

Tuesday, June 5, 2018

எழுத்து எனும் வேள்வி

எழுத்து எனும் வேள்வி

எழுதுங்கள். விதியின் எழுத்தை மாற்ற எழுதுங்கள்.

வாழ்க்கையை எளிய முறையில் இனிமையாக அனுபவிக்க எழுதுங்கள். உங்களுடைய எண்ணங்களை எழுதுங்கள். உங்களின் கை எழுத்துக்கு உங்களின் தலையெழுத்தை மாற்றக் கூடிய சக்தி உண்டு. மனதில் உள்ள அழுக்குகள் வெளியேற எழுதுங்கள். மனதில் உள்ள கவலைகள் மறைய எழுதுங்கள்.  யாரிடமும் பேசக் கூசுகின்ற வாரத்தையை அறவே அகற்ற எழுதுங்கள். எழுதுங்கள் எழுதுங்கள் உங்களின் எண்ணங்கள் துாய்மைபெற எழுதுங்கள்.  விதியின் எழுத்தை மாற்ற எழுதுங்கள். விடைகள் தெரியாத வினாக்களை எழுதுங்கள். சொல்ல முடியாத சோகங்களை எழுதுங்கள்.  துடிக்க வைக்கும் வலிகளை எழுதுங்கள்.  யாரிடமும் சொல்லி சந்தோசப்பட முடியாத அற்ப சந்தோசங்களை எழுதுங்கள்.  எழுதுங்கள் எழுதுங்கள் .. மனம் அமைதி பெற எழுதுங்கள்.

இங்கே நீங்கள் எழுதுவது உங்களை புகழ் அடையச் செய்ய அல்ல. உங்களின் எழுத்துக்களை அடுத்தவர்கள் படித்து பாராட்ட அல்ல. எந்த விதமான எதிர்வினையில்லாமல் உங்களின் வினையை அனுபவிக்க எழுதுங்கள்.  விதியை அனுபவித்தல் ஒன்றே விதியை வெல்ல மிகச் சரியான வழி.   உங்களின் எண்ணங்கள் துாய்மையானால் செயல்கள் துாய்மையாகும். உங்களின் செயல்கள் துாய்மையானால் விளைவுகளும் நிச்சயம் நன்மையை மட்டுமே தரும்.
உங்களின் எண்ணங்கள் துாய்மையாக மனம் சுத்தமாக இருக்க வேண்டும். மனம் சுத்தமாக மனதில் அவ்வப்பொழுது எழக்கூடிய கெட்ட எண்ணங்களை அறவே அழித்துவிட வேண்டும்.  அதற்கான ஒரு செயல்தான் எழுதுதல். அதற்காக உங்களின் எழுத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு அதிக பின்னுாட்டங்களைப் பெற்று விடலாம் என்று எண்ணி விடாதீர்கள். அதுவல்ல நம் நோக்கம். பின்விளைவுகளைத் தராத செயல் தான் வேண்டும்.


ஏன் எழுத வேண்டும்? யாருக்காக எழுத வேண்டும்? எப்படி எழுத வேண்டும்? எதையெல்லாம் எழுத வேண்டும்? எழுதுவதால் என்ன பலன்?

இப்படி ஏகப்பட்ட கேள்விகள்  எழும்.    உங்களுக்குள் எழும் அனைத்து கேள்விகளையும் ஒரு வெள்ளைத் தாளில் எழுதி வைத்திருங்கள். விடைகள் ஒவ்வொன்றாக வரும்.