-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label ஜோதிடப் பலன்கள். Show all posts
Showing posts with label ஜோதிடப் பலன்கள். Show all posts

Wednesday, July 3, 2013

ஆருடம் பலன்கள் – ஒன்று-ஒன்று-இரண்டு

ஆருடம் பலன்கள் – ஒன்று-ஒன்று-இரண்டு

அகத்தியரின் பாய்ச்சிகையை மூன்று முறை உருட்டும் போதும் ஒன்றும் ஒன்றும் இரண்டும் விழுந்தால்

பாரப்பா ஒன்று மொன்றும் பதறியே இரண்டும் வீழ்ந்தால்
சீரது வழிந்து போகும் சிக்குகள் பலவுண்டாகும்
பேரது கெடுக்கவுந்தன் பெண்டீரும் துணையே யாவாள்
கூறவே நினைத்த யெண்ணம் கூடாது நாள் தானாகவே.

கடந்த காலத்தில் நாம் செய்த வினைகளுக்குத் தக்கவாறு நிகழ்காலத்தில் விளைவுகள் நடக்கின்றன. அதை குறிப்பாக உணர்த்துவது தான் ஆருடம்.

பொறுமை வேண்டும். நிகழ்காலம் சாதகமான சூழ்நிலையில் இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் செய்த வினைப்பயனில் தொல்லைகளை மட்டும் அனுபவிக்கக் கூடிய காலமாக இது அமையலாம். குடும்பத்தில் அமைதியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது நல்லது. உணவுக்கட்டுப்பாடு, உடல்கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கக் கூடிய நிலை உண்டு. நினைத்த செயலில் வெற்றி பெற செயல்முறைகளை நன்கு ஆராய வேண்டும். ஒருவருக்கு இருவரிடம் நன்கு ஆலோசனை செய்து சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து, நிதானத்துடன் செயல்பட வேண்டும்.. வாங்கிய கடனை அடைக்க உகந்த காலமாக அமையும். கல்வியில் தேக்க நிலை ஏற்படலாம்.

நற்பெயருக்கு களங்கம் வரும் என்பதால் எதிர்பாலினரிடம் (ஆணுக்கு பெண்ணும், பெண்ணிற்கு ஆணும்) கவனமாக நடக்க வேண்டும். அமைதியுடன் சிந்தித்தால்  வரும் தீவிரத் துன்பங்களைத் தவிர்க்கலாம். அல்லது குறைக்கலாம். சாதாரண நோய்களுக்சுட சிரத்தையெடுத்து வைத்தியம் பார்ப்பது நல்ல பலனைத் தரும்.

பொதுப்பலன்  - நிதானம்

Monday, January 21, 2013

வாழ்வியல் தடைகளும் – ஜோதிடத்தீர்வுகளும்

வாழ்வியல் தடைகளும் – ஜோதிடத்தீர்வுகளும்

ஒருவர் திருப்தியாக வாழ்வதற்கு தடையாக இருக்கும் அனைவற்றிற்கும் காரணம் அவரே தான் முற்பிறவியில் செய்த வினைப்பயனை அனுபவிக்கவே இப்பிறவி எடுக்கிறோம். கடந்த பிறவியிலேயே முழுவதும் அனுபவித்திருந்தால் இப்பிறவி ஏற்பட்டிருக்காது. சரி. இப்பொழுது பிறந்துவிட்டோம். பிரச்சனைகளும் வந்து விட்டது எப்படி தீர்வு காண்பது?

ஒருவருக்கு நிகழக்கூடிய விளைவுகளை மட்டும் ஜோதிடம் கூறவில்லை. அதற்குரிய விடைகளையும் கொடுத்துள்ளது. நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உதாரண ஜாதகம்
ரிசப இலக்கினம் – துலாம் இராசி 


இவரின் முதல் கேள்வி – எனது மனம் உறுதியான நிலையில் இல்லை. இது தான் இவரின் பிரச்சனை. ஆனால் இது தான் இவரின் பலம். தன்னுடைய பலவீனம் என்ன என்பதைத் தெரிந்தவன் தான் தன்னுடைய பலத்தையும் உணரமுடியும்.

இந்த நிலை ஏன் என்பதற்கு ஜோதிடம் கூறும் காரணம். இலக்கினத்திற்கு 6ல் சந்திரன். சந்திரன் மனதைக் குறிக்கும் கிரகம். ஆறாம் இடம் மறைவு, நோய், வழக்கு இது போன்றவற்றைக் குறிக்கும் இடம். ஆறாம் இடத்தில் சந்திரன். மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுமாற்றம் வரத்தான் செய்யும். ஆனால் இவருக்குத்தான் அது முன்னேற்றத்தின் தடைக்கல்லாக அமைந்துவிட்டது.

சந்திரன் மட்டும் தான் காரணமா?
எப்பொழுது தைரியம் குறைகிறதோ அப்பொழுது மனம் தடுமாற்றம் அடையும். பயம் உண்டாகும். எதையும் உறுதியுடன் செய்ய தயங்குவோம். தேவையில்லாமல் சந்தேகம் கோபம் வரும். தைரியம் தரும் பாவம் 3ம் பாவம் அங்கு இருக்கும் செவ்வாய் நீசம். நீசம் பெற்ற செவ்வாய் 4ம் பார்வையாக மனோகாரன் சந்திரனைப் பார்க்கிறது. தேவையான தைரியம் இல்லாதால் மனம் குழப்பத்தில் உள்ளது. 

மனத்தடுமாற்றம் உள்ள அனைவருக்கும் என்ன தான் தீர்வு. வாழ்க்கை முழுவதும் இதே நிலைதானா? இதற்குத் தீர்வு இல்லையா? 

இருக்கிறது. அதுவும் ஜோதிடத்திலிருந்துதான் கிடைக்கப்  பெறப்போகிறோம். முடிவு எடுக்கும் திறனை வளர்த்துக்கொண்டால் இந்த பிரச்சனையை சமாளித்துவிடலாம். எப்படி வளர்த்துக் கொள்வது.? நம்மால் ஒரு செயல் செய்ய முடியாத பொழுது, அச்செயலை செய்ய தகுதியுடைய ஒருவரின் மூலமாக நாம் செய்து கொள்கிறோம். அதே போலத்தான் நம்முடைய முடிவை மற்றொருவரின் மூலமாக செய்து கொள்ளலாம். அப்படி யார் மூலம் நமக்கு ஆதாயம் வரும்?

ஜாதகத்தில் சூரியன் ஆட்சி. புதன் ஆட்சி. சனி உச்சம். இப்படி வலுவான கிரகங்கள் உள்ளன. இதில் சனியும் சூரியனும் பலம் பெற்றவையாக உள்ளன. சூரியன் தந்தைக்குரிய கிரகம். பொதுவாக தலைமைப் பண்பு கொண்ட கிரகம் நல்ல நிலையில் இருப்பதால் உங்களின் முடிவுகளை அவரிடம் கேட்டு நடப்பது சிறந்தது. சுக்கிரன் – மனைவிக்கு காரகர். அவர் சூரியனுக்கு அடுத்த நல்ல நிலையில் உள்ளார். மனைவியின் ஆலோசனை நம்பிக்கையைத் தரும். நண்பர்களின் ஆலோசனை நல்ல அனுபவத்தைத் தரும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் நன்றாக சிந்திக்கக்கூடியவர் தான். ஆனால் நிதானம் மட்டும் கொஞ்சம் குறைவாக இருக்கும். காரணம் புத்தி காரகன் புதன்- ஆட்சி ஆனால் வக்கிர நிலை. இதை நிவர்த்தி செய்ய உங்களை நீங்கள் புரிந்து கொள்ள தினசரி நடப்பவற்றை டைரியில் எழுதுங்கள் அப்பொழுது உங்களின் சிந்தனை என்ன தவறு எங்கே நடக்கிறது என்பது புரிய வரும். உங்கள் முடிவுகளை ஞாயிற்றுக்கிழமைகளில் (சூரியனுக்கு உகந்த நாள்) அமைதியாக இருக்கும் சூழ்நிலையில் எடுத்தால் வெற்றி நிச்சயம். சந்திராஷ்ட தினங்களில் கவனமாக இருங்கள். தினமும் உங்கள் வாழ்க்கையில் உங்களால் நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து பெருமைப்படுங்கள். அது நடந்த சூழ்நிலை அதை தாங்கள் நடத்திய விதம் இவற்றை நினைத்துப் பார்த்தால் தங்களின் கேள்விகளுக்கு விடை தானாக கிடைத்துவிடும்.

Friday, January 4, 2013

27ம் வயதில் என்ன நடக்கும்?

27ம் வயதில் நடைபெறும் நிகழ்வுகள்
பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.


ஜோதிடத்தில் பலன்கள் கூற நிறைய விதிமுறைகள் உள்ளன அவற்றில் உள்ள கருத்துக்களை மக்களிடம் எளிமைப்படுத்தி கூறுவதற்காக இருக்கும் முறைகளில் ஒன்று தான் பிருகு சரல் பத்ததி. இம்முறையில் ஜோதிடத்தின் பலன்களை முழுமையாகவும் எளிமையாகவும் தெரிந்து கொள்ளமுடியும்.

ஒருவருடைய வாழ்வில் நடைபெறும் அல்லது நடைபெற இருக்கும் அனைத்தும் கோள்களின் தாக்கங்கள் மூலம் தான் நடைபெறும் என்பது ஜோதிடக் கருத்து. ஜோதிடத்தில் கூறப்படும் பலன்கள் அனைவருக்கும் பொதுவானது தான். ஆனால் கோள்களின் பலம் மற்றும் தாக்கங்கள் பாவங்களுக்குத் தக்கவாறு விளைவுகளைக் கொடுக்கின்றன. உதாரணமாக ஏழாம் பாவம் களத்திரம் மற்றும் திருமணம் தொடர்பானது. திருமணத்திற்கான கால நேரத்தைக் கணக்கிடும் போது 7ம் பாவம் மட்டுமல்லாமல் இரண்டாம் பாவம் (குடும்பம்) ஐந்தாம் பாவம் (குழந்தைகள்) இவையும் முதல்பாவம் (வாழ்வின் அடுத்த நிலை) , பதினொன்றாம் பாவம் ( இலாபம் ) இப்படி பலதரப்பட்ட காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜோதிடப்பலன்கள் பார்க்கும் பொழுது வயது மிக முக்கிய காரணியாக அமைகிறது. காரணம். பாவங்கள் 12தான் அது வாழ்க்கையின் முழுமைக்கும் பொதுவானது. எடுத்துக்காட்டாக 7ம் பாவம் களத்திரம் திருமணம் அது 7வயது குழந்தைக்குப் பொருந்துமா என்றால் இல்லை நண்பர்கள் என்ற எல்லையில் நின்றுவிடும் அதே போலத்தான் 27ம் வயது என்பது காதல், திருமணம், வேலை, உயர்கல்வி, குழந்தைகள் இது போன்ற காரகங்கள் நடைபெறக்கூடிய காலகட்டம்.

ஒரு பாவம் ஒன்றுக்கும் மேற்பட்ட செயல்களுக்குப் பொறுப்பேற்கிறது. அதைத்தான் காரகத்துவம் என்கிறோம். உதாரணமாக 4ம் பாவம் தாய் கல்வி வாகனம் காமம் வீடு இது போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட காரகத்துவங்கள் ஒவ்வொரு பாவத்திற்கும் உண்டு.

ஒரு செயல் நடக்கும் கால நேரங்களை கணிக்க ஜோதிடத்தில் உள்ள முறைகளில் பிருகு சரல் பத்ததி முறையும் ஒன்று. அதிலிருந்து ஒரு பகுதி.


பகுதி – 6

ஜெனன ஜாதகத்தில் செவ்வாய் எங்கிருக்கிறாரோ அவரிடமிருந்து எண்ண வரும் 10ம் பாவ பலன்களில் ஒன்று ஜாதரின் 27ம் வயதில் நடைபெறும்.



விளக்கம்.

கால புருசத்தத்துவப்படி மேசம் முதல் பாவம். மகரம் 10ம் பாவம். மகரத்தில் செவ்வாய் உச்சம் கடகத்தில் செவ்வாய் நீசம். மேசம், விருச்சிகம் செவ்வாய் ஆட்சி வீடுகள். மேசம் செவ்வாயின் மூலத்திரிகோண வீடு.

உதாரணமாக மீன இலக்கிண ஜாதகருக்கு செவ்வாய் 10ல் அதாவது தனுசில் இருப்பதாக வைத்துக்கொண்டால் செவ்வாய் இருக்கும் தனுசில் இருந்து 10ம் இடமாக வருவது கன்னி. கன்னி இலக்கிணத்திலிருந்து 7ம் இடம். அதாவது செவ்வாய் (தனுசு) முதல் எண்ண 10ம் இடமாக வரும் (கன்னி) இலக்கிணத்திற்கு 7ம் பாவமாக விளங்குவதால் 7ம் பாவ  காரகத்துவங்களில் ஒன்று இந்த ஜாதகரின் 27ம் வயதில் நடைபெறும்.  ( இந்த ஜாதகருக்கு திருமணம் இந்த காலகட்டங்களில் தான் நடந்தது.  )

அனைவருக்கும் இதே காலகட்டங்களில் கண்டிப்பாக திருமணம் நடைபெற்றுவிடுமா? என்றால். இல்லை. காரணம் 7ம் பாவம் என்பது திருமணம் மட்டும்அல்ல. நண்பர்கள், கூட்டுவியாபாரம், மாரகம், 4க்கு நான்காகவிளங்குவதால் வாகனத்தின் மூலமும் தாயின் மூலமும் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி. இது போன்ற எது வேண்டுமானாலும் ஜாதகரின் 27ம் வயதில் கிடைக்கப் பெறலாம்.

மேலும் செவ்வாய் இருக்கும் இடத்திற்கு 10ம் இடத்தில் உள்ள கிரகங்களின் காரகத்துவங்களும் இதில் அடங்கும். பிருகு சரல் பத்ததின் மீதான விளக்கங்களும் தேடல்களும் ஆராய்ச்சிகளும் இவை சரியாக இருக்கிறது என்று உணர்தியிருக்கின்றன.

நீங்களும் உங்கள் வாழ்வில் 27ம் வயதை ஆராய்ந்து பார்த்தால் உண்மையை உணர முடியும்.

ஆராய்தல் தொடரும்.

Wednesday, October 3, 2012

தொழிலில் இலாபம் பெற ஜோதிடம் கூறும் இரகசியம்

தொழிலில் இலாபம் பெற ஜோதிடம் கூறும் இரகசியம்


வேலைக்கும் தொழிலுக்கும் என்ன தொடர்பு? வேலை என்பது உழைப்பு சம்பந்தப்பட்டது. தொழில் என்பது பொருள் சம்பந்தப்பட்டது. சம்பளம் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம். இலாபம் உங்கள் முதலீட்டின் மீதான ஊதியம்.

பணம் உங்களுக்கு கிடைக்கக்கூடிய விதி இருந்தால் எப்படிவேண்டுமானாலும் வரும். உங்கள் கையில் கிடைக்கக்கூடிய பணம் அது இலாபமாகவும் இருக்கலாம் சம்பளமாகவும் இருக்கலாம். அது போலத்தான் செலவுகளும். சேமிப்பாகவும் இருக்கலாம் நட்டமாகவும் இருக்கலாம். செலவுகளை முதலீடாக மாற்றக்கூடிய திறமைஇருந்தால் நீங்களும் பணக்காரராகலாம். ஆனால் ஏன் முடியவில்லை. நீங்கள் எதை அனுபவிக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் உணராதது தான். தொழில் செய்து வெற்றி பெற்றவர்களைவிட தோற்றவர்கள் தான் அதிகம் ஏன்.

தொழில் மற்றும் வேலைக்கு பத்தாம் பாவம் தான் முதன்மை பாவம். பத்தாம் பாவம் தொழில். பதினொன்றாம் பாவம் இலாபம். அஷ்டவர்க்கம் மூலம் ஒவ்வொரு பாவத்திற்கும் நாம் பெற்ற மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஜோதிடம் நீங்கள் இப்பிறவியில் பெறக்கூடியவற்றை தெளிவாகக் காட்டும் கண்ணாடி. தொழிலில் நீங்கள் பெறக்கூடியது என்ன இலாபமா? நட்டமா?

சொந்தத் தொழில் செய்ய யோகம் இருப்பவர் மட்டுமே சொந்தத் தொழில் செய்ய வேண்டும் அதாவது முதலாளியாக வேண்டும் இல்லையென்றால் தொழிலாளியாகிவிட வேண்டியது தான். தொழில் தான் என்று முடிவாகிவிட்டபின்பு இலாபம் குறைவாக கிடைக்குமா? அதிகமாக கிடைக்குமா?

தொழில் பாவம் குறைவான மதிப்பெண் பெற்று இலாப பாவம் அதிக மதிப்பெண் பெற்றால் நீங்கள் செய்யும் தொழிலில் உழைப்பிற்கு மேல் வருமானம் வரும். அதே சமயம் பத்தாம் பாவம் பலம் அதிகமாகி பதினொன்றாம் பாவம் பலம் குறைந்தால் நீங்கள் உழைப்பதில் கெட்டிக்காரர் ஆனால் வருமானம் தான் குறைவு. அப்பொழுது என்ன செய்ய வேண்டும்? உங்கள் தொழிலிருந்து சம்பளமாக அதிக தொகையை எடுத்துக்கொள்ளுங்கள் (அது உங்கள் பெயரில் இல்லாமல், மனைவி மக்கள் பெற்றோரின் பெயரில் இருந்தால் நல்லது).  மீதமுள்ளதை இலாபமாக மாற்றி தொழிலிலே மீண்டும் முதலாக மாற்றிவிடுங்கள். உங்கள் தொழிலைப் பொருத்தவரையில் இலாபம் குறையும். அது சொந்த வாழ்க்கையைப் பாதிக்காது.

இத்துடன் முடிந்ததா என்றால் இல்லை. காரணம் உங்களுக்கு யார் மூலம் இலாபம் அதிகம் என்பதையும் கணிக்க வேண்டும். மனைவியினால் இலாபம் இல்லை என்றால் அவர்கள் பெயரில் சம்பளம் கொடுத்தால் அதுவும் உங்கள் கைசேராது. இப்படி பன்னிரெண்டு பாவங்களிலும் நீங்கள் அனுபவிக்கக்கூடியவற்றை ஆராய்ந்து தொழில் செய்தால் வெற்றி நிச்சயம்.

முடிவில் உங்களுடைய வினைப்பயனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள் உங்கள் விருப்பப்படி. இப்படித் தான் எல்லா பாவ பலன்களையும் நம் விருப்பப்படி அனுபவித்தால் நாம் தான் உண்மையில் மகிழ்ச்சியானவர்.

ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

ஆம்.
பலன்கள் ஒன்றுதான் ஆனால் விளைவுகள் வேறு.

அனைவருக்கும் குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி நடக்கத்தான் செய்கிறது. அனைவருடைய வாழ்க்கையிலும் சுக்கிர புத்தி, சனி புத்தி, குரு புத்தி வரத்தான் செய்கிறது. அப்படியிருந்தும் ஏன் இந்த வித்தியாசம்.  இறைவன் ஒருவருக்கு ஆனந்தத்தையும் ஒருவருக்கு அழுகையையும் ஏன் கொடுக்க வேண்டும். படைக்கும் எல்லோரையும் பணக்காரராகவே படைத்துவிட்டால் இறைவனுக்கு என்ன குறைவந்துவிடப்போகிறது. ஏன் இந்த ஓரவஞ்சனை. இறைவா என்னை பணக்காரணாக்கிவிடு இல்லையேல் அவனை ஏழையாக்கி விடு. சமத்துவ சமதர்மத்தைப் படைத்துவிடு. என்று இறைவனிடம் சண்டை போடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். காரணம் ஞாயமானது தானே. ஆனால் பதில் முற்பிறவி கர்ம வினைப்பயன் கூறப்படுகிறது. இருப்பினும் இறைவன் இப்பிறவிக்கு என்று புதிதாக அதுவும் சமமாகத்தான் எல்லாவற்றையும் கொடுத்துள்ளான்.

மழை வெயில் காற்று ஆகாயம் மரங்கள் மலர்கள் என்று அனுபவிக்கும் அனைத்தையும் இறைவன் பொதுவாகத்தான் கொடுத்துள்ளான். அதை ஜோதிடம் உறுதி செய்கிறது. ஒன்பது கோள்கள் இருபத்திஏழு நட்சத்திரங்கள் 108 பாதங்கள் இப்படி அனைத்தும் பொது தான். இவைதரக்கூடிய மொத்த மதிப்பெண்களும் பொது தான் அது தான் 337அஷ்டவர்க்கத்தில்.

அஷ்டவர்க்கம். ஒவ்வொருவரும் இப்பிறவிக்கு பெற்ற மதிப்பெண்கள். பன்னிரெண்டு பாவத்திற்கும் உரிய மதிப்பெண்கள். மொத்தம் 337. அனைவருக்கும் பொது தான். ஜோதிடம் அனைவருக்கும் தருவது மொத்தம் 337 மதிப்பெண்கள். அனைவரும் சமம். நாடாளும் மன்னன் முதல் கடைகோடி மனிதன் வரை அனைவருக்கம் அஷ்டவர்க்கப் பரல்கள் 337 தான். இந்த 337 தான் 12 பாவங்களுக்கும் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
பன்னிரெண்டு பாவங்கள்.
1 இலக்கிண பாவம்
2 தனம் வாக்கு குடும்பம்
3 தைரியம் வீரியம் சகோதரம்
4 தாய் கல்வி காமம்
5 புத்திரம் அதிர்ஷ்டம்
6 நோய் வழக்கு கடன்
7 களத்திரம், நண்பர்கள்
8 ஆயுள், சட்டம்
9 தந்தை பாக்கியம்
10 தொழில் கர்மா
11 இலாபம்
12 விரயம், மோட்சம்

மனிதனுடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் இந்த 12 பாவங்களில் அடங்கியுள்ளது. பிறப்பு 5ம் பாவம் மோட்சம் 12 ம் பாவம். இந்த 12 பாவங்களிலும் மொத்தம் சேர்த்து 337 மதிப்பெண்கள். ஆனால் எந்த பாவத்திற்கு எத்தனை மதிப்பெண்கள் என்பது தான் விதியின் விளையாட்டு.

இலாபம் அதிகமாக கிடைக்கக்கூடிய விதி இருந்தால் கண்டிப்பாக இலாபம் கிடைக்கும் உங்களின் முதலீட்டிற்குத் தகுந்த படி. 100 சதவீத இலாபம் கிடைக்கக்கூடிய விதிப்பயன் இருந்தால் உங்களிடம் உள்ளது இரட்டிப்பாகப் போகிறது. உங்களின் சொத்து மதிப்பு 10 கோடி என்றால் விதியின் விளையாட்டில் நீங்கள் பெறப்போவது 20கோடி. அதே தொகை 10 ரூபாய் என்றால் 20 அது தான் விதியின் கணக்கு. இலாபத்தைப் போன்றே நட்டமும் அனைவருக்கும் ஒன்று தான். பாதிக்குப் பாதி போகும் போது 5கோடியும் 5ரூபாயும் 50சதவீதம் தான்.

அனைத்தையும் அனைவராலும் பெறமுடியாது. ஒருவருக்கு நட்டம் ஒருவருக்கு இலாபமாக அமையும். நோய் இருந்தால் தான் மருத்துவருக்கு வேலை. ஒருவர் செலவு செய்யும் பணம் தான் மற்றொருவருக்கு கூலியாகவோ இலாபமாகவோ மாறுகிறது. உங்களுக்கு எந்த பாவம் பலம் பெற்றதோ அந்த பாவபலத்தை நீங்கள் முழுவதுமாக உபயோகித்தால் அந்தத் துறையில் நீங்கள் தான் பணக்காரர்.

ஏழை என்பவன் யார்? யாரெல்லாம் தன்னுடைய திறமையை அறிந்தும் அதனை பயன்படுத்தாமல் இருக்கிறானோ அவனே ஏழை. தன் திறமையை அறியாதவன் மூடன். என்னுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்று அறிய முற்படும் போது தான் ஜோதிடத்தின் துணை தேவைப்படுகிறது. தன்னை அறிதல் என்பது அதுதான். எனக்கு என்ன தெரியும் என்ன தெரியாது என்பதை தெரிந்து வைத்திருப்பவன் அறிவாளி. அதைப் பயன்படுத்துபவன் பணக்காரன்.

எப்படி ?
உணருதல் தொடரும்.

Tuesday, September 18, 2012

ஜோதிடப் பலன்கள் தெரிந்துகொள்ளுவதற்கு முன்

ஜோதிடரின் என்ன கேட்க வேண்டும் எப்படி கேட்கவேண்டும்.

ஜோதிடப் பலன்களை கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ஜோதிடரிடம் செல்லும் போது சில விஷயங்களைத் தெரிந்துவைத்திருப்பது நல்லது. எப்படி கேள்வி கேட்க வேண்டும். என்ன கேள்வி கேட்கவேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும். காரணம் நாம் கேட்கும் கேள்விகளுக்குரிய பதில்கள் தான் கிடைக்கப்பெறுகின்றன என்னும் போது கேள்விகள் தீர்க்கமாக இருக்க வேண்டியது அவசியம்.

எந்த ஒரு செயலும் முழு நம்பிக்கையோடு செய்யும் போது தான் பலன்களை அனுபவிக்க முடிகிறது. நம்பிக்கையில்லாத நிலையில் செய்யும் செயல்கள் எதிர்பார்த்த பலனைத் தருவதில்லை. அதுபோலத் தான் ஜோதிடமும். ஜோதிடம் பார்க்கச் செல்லும் போது ஜோதிடரின் மீதும் ஜோதிடத்தின் மீதும் நம்பிக்கை மிக அவசியம். நம் கேள்விக்குரிய பதிலை இறைவன் இவர் மூலமாகத் தெரிவிக்க இருக்கிறான் என்ற எண்ணம் வரவேண்டும்.

ஜோதிடரிடம் கேட்கக் கூடிய கேள்விகள் நமக்கு உண்மையில் தேவையான ஒன்றாக இருக்கவேண்டும். அது தவிர, ஜோதிடரை குறைகூறும் நோக்கிலோ, ஜோதிடத்தைப் பலிக்கும் நோக்கிலோ அமைவது கூடாது. நீங்கள் உங்கள் நன்மைக்கான கால நேரங்களை அறிவதற்காகத் தான் செல்கிறீர்கள். ஜாதகப் பலன்கள் எவ்வாறு இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நன்றும் தீதும் பிறர் தர வாரா என்பதற்கிணங்க நமக்கு நடக்க இருப்பதற்கு நாமே காரணம் என்று உணர்ந்தால் எதையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வந்துவிடும்.


ஜாதகரைப் பற்றிய கேள்விகள் தான் கேட்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஜாதகம் உண்டு ஒருவரின் ஜாதகம் போல் இன்னொருவருக்கு இருக்காது அதனால் அவர்அவருக்கு என்று தனியாகத்தான் ஜோதிடம் பார்க்கப்படவேண்டும். ஒருவருடைய ஜாதகம் அவருக்குரியது மட்டுமே, அதைவிடுத்து மாமா சித்தப்பா ஒன்றுவிட்ட பெரியப்பா இவர்களுக்கான பலன்களை எதிர்பார்க்கக் கூடாது. எத்தனை சித்தப்பா, எத்தனை மாமா இதுபோன்ற கேள்விகள் தவிர்க்கப் படவேண்டும். ஏன் என்றால் தேவையில்லாத கேள்விகளால் ஜோதிடரின் நேரமும் நம்முடைய நேரமும் வீணாகிவிடுமே தவிர பயனேதும் இருக்கப்போவதில்லை.

அனைத்துக் கேள்விகளுக்கும் ஜோதிடத்தில் பதில் உண்டு. அதற்காக அனைத்துக் கேள்விகளையும் கேட்கக்கூடாது. ஓரிரு கேள்விகள் தான் கேட்கப்பட வேண்டும். அதுதான் ஜோதிடர் மனஒருங்கிணைப்போடு ஒரே சிந்தனையில் பதில் கூற வழிவகுக்கும். ஒரே கேள்வி தானே என்று, எதிர்காலம் எப்படி இருக்கும் என்று மொத்தமாகவும் கேட்கக் கூடாது. உங்களுடைய கேள்வி என்ன என்பதை தெளிவாக கேட்கவேண்டும்.

முடிந்தவரை ஜாதகரை உடன் அழைத்துச் செல்வது நல்லது. தனக்குரிய பலனைத் தெரிந்து கொள்ளக்கூடிய மனோரீதியான பயிற்சியாக இது அமையும். கேள்விகள் எப்படி இருக்கின்றன பதில்கள் எப்படி அமைகின்றன என்று ஜாதகர் உணர்ந்தால் தான் எதிர்காலம் பற்றிய தீர்க்கமான முடிவுக்கு வரமுடியும்.  

ஜோதிடரிடம் ஜாதகத்தைக் கொடுத்த உடனே நாம் வந்திருப்பதனோட நோக்கத்தை அதாவது நம்முடைய தேவையை கூறிவிடவேண்டும். பிரசன்னம் மூலம் நம்முடைய  வருகையின் தேவையை கண்டுவிடலாம் என்றாலும் கூட அது நம் நோக்கமன்று. நம்முடைய கேள்விக்குரிய பதில் தான் வேண்டும். அதனால் தேவைகள் தொடர்பான முக்கிய கேள்வியைக் கேட்க வேண்டும் மற்ற கேள்விகளை வரிசைப்படுத்தி எழுதிவைத்துக்கொள்வது நல்லது. அப்பொழுது தான் நம்முடைய சந்தேகங்கள் தெளிவாகின்றனவா என்பதை உறுதி செய்ய முடியும்.

ஜோதிடர் பலன்களைக் கூறும் போது அமைதியாக கேட்க வேண்டும். தேவைகள் தொடர்பான நியாயமான கேள்விகளை அடுத்தடுத்து கேட்கலாம்.  முடிந்த பிறகு அவருக்கு நன்றி கூறி பின் விடைபெற வேண்டும்.

ஜாதகம் பார்ப்பதற்கான தொகையை முதலிலேயே கொடுத்துவிடுவது சிறந்தது அல்லது குறைந்த பட்சம் அந்தத் தொகையை முன்கூட்டியே தெரிந்து வைத்திருத்தல் நல்லது. பேரம் பேசுவதற்கான இடம் அல்ல. காரணம். பேரம் பேசுவதற்கு இது பொருள் விற்கும் இடமல்ல. முடிந்தவரை அடிப்படை ஜோதிடம் கற்றிருந்தால் ஏன் எதற்கு எப்படி என்ற தேவையான கேள்விகளைக் கேட்கவும் தேவையற்ற கேள்விகளை தவிர்க்கவும் முடியும்.