-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label ஜோதிட ஆராய்ச்சி. Show all posts
Showing posts with label ஜோதிட ஆராய்ச்சி. Show all posts

Tuesday, February 12, 2013

மூலம் ஆயில்யம். நட்சத்திரங்களால் பெண்களின் புகுந்த வீட்டிற்கு தீங்கு வருமா?

மூலம் ஆயில்யம். நட்சத்திரங்களால் பெண்களின் புகுந்த வீட்டிற்கு தீங்கு வருமா?

வராது. ஒருவருடைய வாழ்க்கையின் முழுப்பங்கும் அவருடைய ஜாதகத்தை வைத்தே கணிக்கப் படுகிறது. மேலும் சாதாரண நிலையில் அடுத்தவர்களின் இராசியோ நட்சத்திரமோ மற்றவர்களிடம் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. எப்பொழுது இருவருக்கும் இடையில் ஒரு பிடிப்பு, ஒரு பந்தம், ஒரு உறவு ஏற்படுகின்றதோ அப்பொழுது தான் ஒருவரின் ஜாதகம் மற்றவர்க்கு பயன்படுகிறது.

ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படும் போது ஒருவருடைய எண்ண அலைகள் மற்றவருடன் ஒத்துப் போகவேண்டிய நிலையில் இருப்பதால்தான் பிரச்சனைகள் எழுகின்றன.

ஒரு குடும்பம் என்றால் குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒருவருக்கொருவர் புரிதல் வேண்டும். விட்டுக்கொடுத்தல் வேண்டும். அப்படி செய்ய மறுக்கும் போது தான் பிரிவினைகள் சங்கடங்கள் ஏற்படுகின்றன. இது குடும்பத்திற்கு மட்டும் அல்ல. அனைத்து இடத்திற்கும் பொருந்தும். நமக்கும் நம்அருகில் இருப்பவருக்கும் ஒரு புரிதல் உணர்வு இருந்துவிட்டால் யாரும் யாருக்கும் பிரச்சனையாக இருக்க மாட்டார்கள்.

இது அனைத்து நட்சத்திரங்களுக்கும் பொருந்தும். ஆனால் மூலம் ஆயில்யம் விசாகம் கேட்டை இது போன்ற நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இடைச் செறுகல்கள்தானே தவிர, பழங்கால ஏடுகளில் இருப்பதாகாத் தெரியவில்லை.

இன்றைய காலகட்டத்தில்  மூலம் ஆயில்யம் நட்சத்திரங்களின் மீதான பார்வை ஜோதிடர்கள் மத்தியிலும் ஜாதகர்கள் மத்தியிலும் மாறியிருக்கிறது. இருப்பினும் அடுத்தவர்களுக்கு ஆலோசனை கூறுகிறார்களே தவிர தனக்கு என்று வரும் போது மூலம் ஆயில்யம் நட்சத்திரங்களை முழுமனதுடன் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.  அதற்கு முதலில் நாம் ஜோதிடத்தை உணர வேண்டும். ஜோதிடத்தை முறைப்படி தெரிந்துகொள்ள முன்வர வேண்டும்.

Monday, January 21, 2013

வாழ்வியல் தடைகளும் – ஜோதிடத்தீர்வுகளும்

வாழ்வியல் தடைகளும் – ஜோதிடத்தீர்வுகளும்

ஒருவர் திருப்தியாக வாழ்வதற்கு தடையாக இருக்கும் அனைவற்றிற்கும் காரணம் அவரே தான் முற்பிறவியில் செய்த வினைப்பயனை அனுபவிக்கவே இப்பிறவி எடுக்கிறோம். கடந்த பிறவியிலேயே முழுவதும் அனுபவித்திருந்தால் இப்பிறவி ஏற்பட்டிருக்காது. சரி. இப்பொழுது பிறந்துவிட்டோம். பிரச்சனைகளும் வந்து விட்டது எப்படி தீர்வு காண்பது?

ஒருவருக்கு நிகழக்கூடிய விளைவுகளை மட்டும் ஜோதிடம் கூறவில்லை. அதற்குரிய விடைகளையும் கொடுத்துள்ளது. நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உதாரண ஜாதகம்
ரிசப இலக்கினம் – துலாம் இராசி 


இவரின் முதல் கேள்வி – எனது மனம் உறுதியான நிலையில் இல்லை. இது தான் இவரின் பிரச்சனை. ஆனால் இது தான் இவரின் பலம். தன்னுடைய பலவீனம் என்ன என்பதைத் தெரிந்தவன் தான் தன்னுடைய பலத்தையும் உணரமுடியும்.

இந்த நிலை ஏன் என்பதற்கு ஜோதிடம் கூறும் காரணம். இலக்கினத்திற்கு 6ல் சந்திரன். சந்திரன் மனதைக் குறிக்கும் கிரகம். ஆறாம் இடம் மறைவு, நோய், வழக்கு இது போன்றவற்றைக் குறிக்கும் இடம். ஆறாம் இடத்தில் சந்திரன். மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுமாற்றம் வரத்தான் செய்யும். ஆனால் இவருக்குத்தான் அது முன்னேற்றத்தின் தடைக்கல்லாக அமைந்துவிட்டது.

சந்திரன் மட்டும் தான் காரணமா?
எப்பொழுது தைரியம் குறைகிறதோ அப்பொழுது மனம் தடுமாற்றம் அடையும். பயம் உண்டாகும். எதையும் உறுதியுடன் செய்ய தயங்குவோம். தேவையில்லாமல் சந்தேகம் கோபம் வரும். தைரியம் தரும் பாவம் 3ம் பாவம் அங்கு இருக்கும் செவ்வாய் நீசம். நீசம் பெற்ற செவ்வாய் 4ம் பார்வையாக மனோகாரன் சந்திரனைப் பார்க்கிறது. தேவையான தைரியம் இல்லாதால் மனம் குழப்பத்தில் உள்ளது. 

மனத்தடுமாற்றம் உள்ள அனைவருக்கும் என்ன தான் தீர்வு. வாழ்க்கை முழுவதும் இதே நிலைதானா? இதற்குத் தீர்வு இல்லையா? 

இருக்கிறது. அதுவும் ஜோதிடத்திலிருந்துதான் கிடைக்கப்  பெறப்போகிறோம். முடிவு எடுக்கும் திறனை வளர்த்துக்கொண்டால் இந்த பிரச்சனையை சமாளித்துவிடலாம். எப்படி வளர்த்துக் கொள்வது.? நம்மால் ஒரு செயல் செய்ய முடியாத பொழுது, அச்செயலை செய்ய தகுதியுடைய ஒருவரின் மூலமாக நாம் செய்து கொள்கிறோம். அதே போலத்தான் நம்முடைய முடிவை மற்றொருவரின் மூலமாக செய்து கொள்ளலாம். அப்படி யார் மூலம் நமக்கு ஆதாயம் வரும்?

ஜாதகத்தில் சூரியன் ஆட்சி. புதன் ஆட்சி. சனி உச்சம். இப்படி வலுவான கிரகங்கள் உள்ளன. இதில் சனியும் சூரியனும் பலம் பெற்றவையாக உள்ளன. சூரியன் தந்தைக்குரிய கிரகம். பொதுவாக தலைமைப் பண்பு கொண்ட கிரகம் நல்ல நிலையில் இருப்பதால் உங்களின் முடிவுகளை அவரிடம் கேட்டு நடப்பது சிறந்தது. சுக்கிரன் – மனைவிக்கு காரகர். அவர் சூரியனுக்கு அடுத்த நல்ல நிலையில் உள்ளார். மனைவியின் ஆலோசனை நம்பிக்கையைத் தரும். நண்பர்களின் ஆலோசனை நல்ல அனுபவத்தைத் தரும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் நன்றாக சிந்திக்கக்கூடியவர் தான். ஆனால் நிதானம் மட்டும் கொஞ்சம் குறைவாக இருக்கும். காரணம் புத்தி காரகன் புதன்- ஆட்சி ஆனால் வக்கிர நிலை. இதை நிவர்த்தி செய்ய உங்களை நீங்கள் புரிந்து கொள்ள தினசரி நடப்பவற்றை டைரியில் எழுதுங்கள் அப்பொழுது உங்களின் சிந்தனை என்ன தவறு எங்கே நடக்கிறது என்பது புரிய வரும். உங்கள் முடிவுகளை ஞாயிற்றுக்கிழமைகளில் (சூரியனுக்கு உகந்த நாள்) அமைதியாக இருக்கும் சூழ்நிலையில் எடுத்தால் வெற்றி நிச்சயம். சந்திராஷ்ட தினங்களில் கவனமாக இருங்கள். தினமும் உங்கள் வாழ்க்கையில் உங்களால் நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து பெருமைப்படுங்கள். அது நடந்த சூழ்நிலை அதை தாங்கள் நடத்திய விதம் இவற்றை நினைத்துப் பார்த்தால் தங்களின் கேள்விகளுக்கு விடை தானாக கிடைத்துவிடும்.

Wednesday, January 16, 2013

ஜோதிட ஆராய்ச்சி - பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.

ஜோதிட ஆராய்ச்சி - பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.

மனித வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் அனைத்துச் செயல்களையும் 12 பாவங்களாகப் பிரித்துவிடமுடியும். அந்த 12 பாவங்களின் நாயகர்களாக 9 கோள்களை நியமித்துவிட முடியும் இது தான் ஜோதிடத்தின் கரு.

ஜனனத்திற்கு முந்தைய நிலையிலிருந்து மரணத்திற்கு பிந்தைய நிலைவரை ஜோதிடத்தில் கூறமுடியும். அப்படிக் கூறுவதற்கு உண்மையான பக்தி இருக்க வேண்டும். பக்தி என்பது இறைவனிடம் மட்டும் தான் என்பதில்லை. தன்னைத் தான் உணர்தலே இறைவனை அடைவதற்குச் சமம். சாமானிய மக்கள் தான் இறைவனைத் தேடி ஓடுகின்றனர். தன்னை உணர்ந்தவனிடம் இறைவன் தானே வந்து சேர்கிறான்.

அப்படி இறையருளையும் தன்னகத்தே கொண்ட ஞானிகளால் உணரப்பட்டதே ஜோதிடம். அப்படிப்பட்ட ஞானிகளில் ஒருவர் தான் பிருகு முனிவர். அவர் தனது திவ்ய திருஷ்டியால் உருவாக்கி அருளியதே இந்த ஜோதிட முறை. அவற்றை எளிமைப் படுத்தி ஜோதிட ஆர்வலர்கள் பலரும் எழுதி வைத்துள்ளனர்.

சப்தரிஷி ஜோதிட ஆராய்ச்சி மையம் ஆங்கிலத்தில் எழுதிய கருத்துக்களை எடுத்து தமிழில் கொடுத்துள்ளேன். விதிகள் மட்டுமே மற்றவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம் அது பொதுவானது. ஆனால் அதன் மீதான ஆராய்ச்சியை தனித்தனியாகத்தான் மேற்கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் விடைகள் மீதான தெளிவு பிறக்கும்.
கருத்துக்களை மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம். காரணம் எடுத்துக்காட்டு ஜாதகங்கள் அதன் விளைவுகள் எல்லாம் மிகச் சிறிய அளவிலானது தான். அனைவரும் பங்கெடுத்து ஆராய்ந்தால் மிகத் துல்லிய பலன்களைக் கூற முடியும்.
பிருகு சரல் பத்ததியின் மூலம் எந்தெந்த வயதில் எந்தெந்த கிரகங்களின் தாக்கங்களினால் என்ன நடக்கக் கூடும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். அவற்றில் சில.


விதி – 6
ஜெனன ஜாதகத்தில் செவ்வாய் எங்கிருக்கிறாரோ அவரிடமிருந்து எண்ண வரும் 10ம் பாவ பலன்களில் ஒன்று ஜாதரின் 27ம் வயதில் நடைபெறும்.

விதி 8– இராகு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 6ம் பாவ பலன்களின் ஒன்றை ஜாதகரது 38ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 9– கேது பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 12ம் பாவ பலன்களின் ஒன்றை ஜாதகரது 24ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 10-குரு பகவான் தான் இருக்கும் இடத்தின் பாவ பலன்களில் ஒன்றையோ அல்லது தனது 9ம் பார்வையின் பாவ பலன்களில் ஒன்றையோ ஜாதகரின் 40ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 11-குரு பகவான் தனது 5ம் பார்வையின் பாவ பலன்களில் ஒன்றையோ அல்லது 5ம் பாவத்திற்கு 3ம் பாவமான 7ம் பாவத்தின் பலன்களில் ஒன்றையோ ஜாதகரின் 32ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 12–சனி பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 3ம் பாவ பலன்களின் ஒன்றை ஜாதகரது 20ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 17– இராகு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்தோ அல்லது தான் இருக்கும் இடத்திலிருந்து 9ம் பாவ பலன்களின் ஒன்றையோ ஜாதகரது 37ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 18– குரு பகவான் தான் இருக்கும் இடத்தின் பலன்களின் ஒன்றை ஜாதகரது 69ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 19-குரு பகவான் தனது 9ம் பார்வையின் பாவ பலன்களில் ஒன்றை ஜாதகரின் 22ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 21-இராகு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5ம் பாவ பலன்களில் ஒன்றை ஜாதகரின் 22ம் வயதில் நடத்தி வைப்பார்.

இந்த விதிகளின் மீதான ஆராய்ச்சியை இனி தொடரலாம்.