-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label விதியும் தீர்வும். Show all posts
Showing posts with label விதியும் தீர்வும். Show all posts

Sunday, August 11, 2019

எழுதினால் என்ன கிடைக்கும்

எழுதினால் என்ன கிடைக்கும்.

எல்லாம் கிடைக்கும். புகழ், பணம், பதவி இப்படி நேர்மறையாகவும் கிடைக்கும் விமர்சனம், அவமானம், அவமரியாதை இப்படியும் கிடைக்கக்கூடும். ஆனால் இவையெல்லாம் உங்கள் எழுத்துக்கள் பொதுவெளியில் பார்க்கப்பட்டால் தான். ஆனால் இங்கே குறிப்பிடப்படும் எழுதுதல் என்னும் செயல் திரும்பி வராத பலனைக் கொடுக்கக்கூடிய செயலாக அமைய வேண்டும்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு எதிர்வினை உண்டு என்று இயற்கை உணர்த்திவருகிறது. நாம் செய்யும் செயலுக்கு எப்படி ஒரு பலன் கிடைக்கிறதோ, அதேபோலத் தான் நாம் அனுபவிக்கும் செயலுக்கும் ஒரு வினை இருந்திருக்க வேண்டும். இதைத்தான் விதி என்கிறோம். காலம் அனைத்து நிகழ்வுகளையும் தன் நினைவகத்தில் வைத்துள்ளது. காலத்தின் சட்டதிட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. காரணம், சட்டத்தை எழுதுவது நாம் தான். அவரவர்களுக்குரிய சட்டத்தை அவரவர் தான் நிர்ணயிக்கிறார்கள். அது தான் விதி. அந்த விதிப்படி நடப்பதும் நடக்க மறுப்பதும் நாம் தான். அது தான் நம் செயல்கள்.

ஒரு செயலை, மிகச் சரியான செயல் என்று என் ஆழ்மனம் அங்கிகரிக்குமானால் அது தான் அந்த செயலுக்கான என்னுடைய சட்டம்.  நீரோட்டத்தோடு செல்வது தான் மிகச் சரி என்று என் ஆழ்மனம் சொல்லுமானல் அது தான் என்னுடைய சட்டம். எந்தச் சூழ்நிலைகளிலும் நான் அதை மாற்றிச் செய்யக்கூடாது. நீரோட்டத்தை எதிர்த்து போராடலாம் என்று என் ஆழ்மனம் கட்டளையிட்டால் அதன் படி நடப்பது சட்டத்தின் படி நடப்பது ஆகும்.

ஆழ்மனம் .. அப்படியென்றால்...

தொடர்வோம்.....

Wednesday, August 1, 2018

உறவு முறைகளை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

 உறவு முறைகளை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்


பிள்ளைகளை முடிவு செய்யும் உரிமையும், பெற்றோர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையும் யாருக்கும் வழஙக்ப்படவில்லை.  கடந்த பிறவிகளில் நம்முடைய வினைப்பயன் தான் நம்மை இந்தப் பிறவியில் இந்தச் சூழ்நிலையில் கொண்டு வந்துவிட்டது. தொடர்பிலலாமல் யாரும் யாருக்கும் தொடர்பாகிவிடமுடியாது.  நீங்கள் முயற்சி செய்தால் பக்கத்து வீட்டுக் காரரை மாற்றி விட்லாம். ஆனால் என்னதான் முயற்சித்தாலும் உங்களின் சகோதர்களை மாற்ற முடியாது. உங்களின் பெற்றோர்களை மாற்ற முடியாது. அது போலத்தான் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்தும் தப்பிவிட முடியாது.  உங்களின் விதியை நீங்கள் அனுபவிக்க வேண்டுமென்றால் உங்களின் உறவு முறைகளை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை மதியுங்கள். 

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஒவ்வொரு எதிர்வினை உண்டு. நீங்கள் செய்யும் நற்செயல்கள் உங்களுக்குப் புண்ணியத்தைத் தேடித் தருகின்றன.  அந்த புண்ணியத்தையும் அறுத்தால் தான் உங்களால் மோட்சத்தை அடைய முடியும். ஆனால் நீங்கள் கடமைகளைச் செய்யும் போது அது புண்ணியமாகாது. இதைத்தான் “கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே” என்று பக்குவப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

உங்கள் உறவு முறைகளுக்குச் செய்யும் உதவி  மற்றவர்களுக்குச் செய்யும் நற்செயல் போன்றதல்ல. அது கடமை. அதனால் உறவுகளுக்குச் செய்யும் உதவி புண்ணியத்தைத் தராது.  ஆனால் முன்பு செய்த பாவத்தை அறுக்கும்.  விதியை அனுபவித்து அதனை மீண்டும் உருவாகமல் தடுப்பது ஒன்றே விதியை வெல்லக் கூடிய சூத்திரம் ஆகும். அதனால் உறவுகளுக்கு உதவுவது நமக்கு விதிக்கப்பட்ட விதியை அனுபவிக்கவும் அதேசமயம் மற்றொரு விதி உருவாகமல் தடுக்கவும் நமக்கு கிடைத்த வாய்ப்பாகும்.

இதனைத் தான் ஜோதிடமும் உணர்த்துகிறது.   ஐந்தாம் பாவம்  தான் அதனை உணர்த்தும் பாவம். புர்வ புண்ணிய பாவம் என்பதும் குழந்தைகள் பாவம் என்பதும் இந்த ஐந்தாம் பாவம் தான்.   மோட்ச பாவமான 12ம் பாவம் 5ம் பாவத்தின் ஆயுள் அதாவது 5லிருந்து 8வது பாவம்.   பாக்கியஸ்தானமான 9ம் பாவம் 5ம் பாவத்தின் பாவத்பாவம் அதாவது 5லிருந்து 5.  5ம் பாவம் சுபத்தன்மையுடன் இருந்து 12ம் பாவம் பாதிப்பிற்குள்ளாகத நிலையில் உங்களின் உறவுகளுக்குச் செய்யும் உதவி நீங்கள் மோட்சத்தை அடைய   வழிகாட்டும். 

விதியை அனுபவித்து அதனை மீண்டும் உருவாகமல் தடுப்பது ஒன்றே விதியை வெல்லக் கூடிய சூத்திரம் ஆகும்.

தொடரும்....

Saturday, July 28, 2018

விதியின் கோட்பாட்டை புரிந்து கொள்ளுங்கள்

விதியின் கோட்பாட்டை புரிந்து கொள்ளுங்கள்

உங்களின் விதிப்படித்தான் இந்த வாழ்க்கை அமைந்துள்ளது.  நீங்கள் வசிக்கும் நாடு, உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்கள், உங்களின் சொந்த பந்தங்கள், பேசும் மொழி இப்படி அனைத்தும் விதிப்படியே அமைந்துள்ளது. உங்களின் இந்த வாழ்க்கைச் சூழல் தான் உங்களுக்கு விதிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையை இதே சூழ்நிலையில் அனுபவிப்பது தான் இந்தப் பிறவியில் நீங்கள் ஆற்றக்கூடிய கடமை. 

”இது தான் விதியென்றால் இந்த விதியை நான் மாற்றிக் காட்டுகிறேன்“ என்று  பலப்பலபல நாடுகளுக்குச் சென்று பலப்பல மனிதர்களிடத்தில்  வெவ்வேறான சூழ்நிலையிலும் வாழலாம்.  இதனை உங்களின் முயற்சி என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.  உங்களின் முயற்சியால் நீங்கள்  உங்களின் சூழ்நிலைகளை மாற்றியமைத்துக்  கொண்டே போகலாம். ஆனால் உங்களைப் பெற்றோர்கள், உங்களின் சகோதர்கள், உங்களின் பிள்ளைகள், உங்களுடைய கொள்ளுத் தாத்தா இப்படி உங்களின் உறவு முறைகளை  எந்த முயற்சியாலும் மாற்றிவிட முடியாது. இது தான் உங்களுக்கு விதிக்கப்பட்ட விதி.

இந்த விதியை அனுபவிப்பதன் மூலம் தான் விதியை மாற்றியமைக்க முடியும். 

தொடரும்....

Tuesday, June 5, 2018

எழுத்து எனும் வேள்வி

எழுத்து எனும் வேள்வி

எழுதுங்கள். விதியின் எழுத்தை மாற்ற எழுதுங்கள்.

வாழ்க்கையை எளிய முறையில் இனிமையாக அனுபவிக்க எழுதுங்கள். உங்களுடைய எண்ணங்களை எழுதுங்கள். உங்களின் கை எழுத்துக்கு உங்களின் தலையெழுத்தை மாற்றக் கூடிய சக்தி உண்டு. மனதில் உள்ள அழுக்குகள் வெளியேற எழுதுங்கள். மனதில் உள்ள கவலைகள் மறைய எழுதுங்கள்.  யாரிடமும் பேசக் கூசுகின்ற வாரத்தையை அறவே அகற்ற எழுதுங்கள். எழுதுங்கள் எழுதுங்கள் உங்களின் எண்ணங்கள் துாய்மைபெற எழுதுங்கள்.  விதியின் எழுத்தை மாற்ற எழுதுங்கள். விடைகள் தெரியாத வினாக்களை எழுதுங்கள். சொல்ல முடியாத சோகங்களை எழுதுங்கள்.  துடிக்க வைக்கும் வலிகளை எழுதுங்கள்.  யாரிடமும் சொல்லி சந்தோசப்பட முடியாத அற்ப சந்தோசங்களை எழுதுங்கள்.  எழுதுங்கள் எழுதுங்கள் .. மனம் அமைதி பெற எழுதுங்கள்.

இங்கே நீங்கள் எழுதுவது உங்களை புகழ் அடையச் செய்ய அல்ல. உங்களின் எழுத்துக்களை அடுத்தவர்கள் படித்து பாராட்ட அல்ல. எந்த விதமான எதிர்வினையில்லாமல் உங்களின் வினையை அனுபவிக்க எழுதுங்கள்.  விதியை அனுபவித்தல் ஒன்றே விதியை வெல்ல மிகச் சரியான வழி.   உங்களின் எண்ணங்கள் துாய்மையானால் செயல்கள் துாய்மையாகும். உங்களின் செயல்கள் துாய்மையானால் விளைவுகளும் நிச்சயம் நன்மையை மட்டுமே தரும்.
உங்களின் எண்ணங்கள் துாய்மையாக மனம் சுத்தமாக இருக்க வேண்டும். மனம் சுத்தமாக மனதில் அவ்வப்பொழுது எழக்கூடிய கெட்ட எண்ணங்களை அறவே அழித்துவிட வேண்டும்.  அதற்கான ஒரு செயல்தான் எழுதுதல். அதற்காக உங்களின் எழுத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு அதிக பின்னுாட்டங்களைப் பெற்று விடலாம் என்று எண்ணி விடாதீர்கள். அதுவல்ல நம் நோக்கம். பின்விளைவுகளைத் தராத செயல் தான் வேண்டும்.


ஏன் எழுத வேண்டும்? யாருக்காக எழுத வேண்டும்? எப்படி எழுத வேண்டும்? எதையெல்லாம் எழுத வேண்டும்? எழுதுவதால் என்ன பலன்?

இப்படி ஏகப்பட்ட கேள்விகள்  எழும்.    உங்களுக்குள் எழும் அனைத்து கேள்விகளையும் ஒரு வெள்ளைத் தாளில் எழுதி வைத்திருங்கள். விடைகள் ஒவ்வொன்றாக வரும்.

Wednesday, May 9, 2018

புதியதோர் விதி செய்வோம்

விதிக்கேற்றால் போலத் தான் நம் வினைகள் நடக்கின்றன என்றால் புதிதாக ஒரு விதி உருவாக எது காரணமாக இருக்க முடியும்.  விதியின் பலனைத் தான் நாம் அனுபவிக்கிறோம் என்றால், நமக்கு நடக்கும் செயல்களுக்கும், நாம் நடத்தும் செயல்களுக்கும் விதி தான் காரணம் என்றால், முயற்சியும் முயற்சியின் பலனும் விதி என்றால், கடந்து சென்ற பிறவிகளில்  நாம் செய்த செயல்கள் அனைத்தும் விதிக்குட்பட்டது  என்று தானே பொருள். அப்படி என்றால்  இப்பிறவி உருவாக எது காரணமாக இருக்கும். பிறப்பது,  இருப்பது பின் அழிவது எல்லாம் விதிப்படியே நிகழும் பொழுது மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு எது காரணமாக அமைகிறது? இப்பிறவிலேயே அனைத்து விதியையும் அனுபவித்து மீண்டும் பிறவாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?  


இப்படிப்பட்ட கேள்விகள் அனைவரின் மனதிலும் தோன்றும்.  சுருக்கமாக கேட்டால், ஒரு விதியை அனுபவிக்கும் பொழுது எப்படி புது விதி ஒன்று உருவாகிறது?  என்ற கேள்விக்கான விடையே மேற்கூறிய அனைத்து கேள்விகளுக்குமான விடை. அதை உணர்ந்து கொள்ள முயற்சிப்போம். 


ஒரு சிறு கதை

ஒரு நாள் வானில் ஓர் அதிசய நிகழ்வொன்று நடக்க இருந்தது.  சிறிது நேரம் மட்டுமே காணக்கூடிய அந்த நிகழ்வைப் பார்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.   100 பேர் மட்டுமே அந்த நிகழ்வை காண முடியும். அதற்கான கட்டணங்களும் விதிமுறைகளும் நிர்ணயிக்கப்பட்டு விட்டன. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ஆட்கள் வரத்துவங்கிவிட்டனர். அனைவரும் வரிசையில் காத்திருக்கிறார்கள்.  தகுதி உள்ள 100  பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டுவிட்டனர்.  இறுதியில் ஒருவர் வருகிறார்.  முதலில் அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.  பின் ஏதோ சில சரிக்கட்டுதல்களுக்குப் பிறகு அனுமதிக்கப்படுகிறார். முதல் 100 பேருக்குள் இருந்து ஒருவர் வெளியேற்றபட்டுகிறார்.  அதிசய நிகழ்வு நடந்து முடிந்து விட்டது. அனைவரும் கண்டு களித்து சென்று விட்டனர்.


முறைப்படி நடந்தும் முதலாமவர்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.  அந்தச் சூழ்நிலைக்கு தகுதியிழந்த ஒருவர் வாய்ப்பைப் பெறுகிறார்.   முதலாமவர் வாய்ப்பு கிடைத்தும் அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை இது தான் அவருடைய விதி.  அவர் அந்த விதியை அனுபவித்து விட்டார்.  இறுதியில் வந்தவருக்கு அந்த அதிசய அனுபவத்தை காண விதிக்கப்பட்டதால் அவர் விதிப்படி அனுபவித்தார்.  ஆனால் இறுதியில் வந்தவர்  தன் முயற்சியால் தனக்குரிய வாய்ப்பை உருவாக்கி இயற்கை விதியை மீறி விதியை அனுபவித்தார். இந்த வினை தான் ஒரு புதிய விதியை மீண்டும் உருவாக்கிவிடுகிறது.  


அப்படியென்றால், விதியை உருவாக்காத அதேசமயம், விதியை அனுபவிக்கும் வினையை எப்படி நிகழ்த்துவது?


தொடரும்.


Monday, August 31, 2015

குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா?

குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா?

இயற்கை என்றைக்கும் எதையும் யாருக்கும் மறுத்ததில்லை. மிக முக்கியமாக குழந்தைப் பேறு எனப்படும் சந்ததி விருத்தியை இயற்கை எந்த உயிரினத்திற்கும் மறுத்துப் படைத்ததில்லை. காரணம் உயிர்களின் பெறுக்கமே இயற்கையை வாழ வைக்கும். உயிர்கள் எதுவுமே இல்லையென்றால் யாருக்காக இயற்கை எதனை உருவாக்கப் போகிறது. இயற்கை தான் வாழ தன்னைச் சார்ந்துள்ள அனைத்தையும் வாழ வைத்துக் கொண்டே தான் இருக்கும். அதனால் சந்ததி விருத்தி என்பது இயற்கையானது. யாருக்கும் மறுக்கப்பட்டது அல்ல. பிறகு ஏன் குழந்தையின்மை என்ற நிலை ஏற்படுகிறது.

குழந்தைப் பாக்கியம் அனைவருக்கும் உண்டு. எந்த வயதில் என்பதில் வேண்டுமானால் சிறு வித்தியாசம் இருக்கலாம். மனப் பக்குவமும் உடற்பக்குவமும் இயற்கையோடு இணைந்திருந்தால் எந்த வயதில் வேண்டுமானாலும் குழந்தைப் பேற்றைப் பெற முடியும். ஆனால் இன்றைய காலத்தில் இயற்கையான நிலையை விட்டு செயற்கையான மன மற்றும் உடல் நிலைகளை பழக்கப்படுத்திக் கொள்கிறோம்.  உணவு மற்றும் உறக்கம் இந்த இரண்டும் சரியாக இருந்தால் பெரும்பாலான நோய்கள் தாக்காது என்று மருத்துவம் கூறுகிறது.

ஒரு சிலருக்கு பருவம் அடைந்து குறைந்த காலங்களிலே உயிரணுக்களின் வளர்ச்சி குறைந்து விடும். ஒரு சிலருக்கு பருவம் அடைந்து சிறிது காலம் கழித்தே உயிரணுக்களின் வளர்ச்சி முழுமை பெறும். உயிரணுக்களே எப்பொழுதும் இல்லை என்ற நிலை இருப்பதாகத் தெரியவில்லை. விதிவிலக்குகளை நாம் கணக்கிக் எடுத்துக் கொள்ள வேண்டாம்.  இதனால் தான் இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை பருவத்திற்கு வந்து இரண்டு வருடங்களுக்குள் திருமணத்தை முடித்து வைத்துள்ளனர். இது தான் சரியானது.

ஒவ்வொரு உடலும் தனக்கு தேவையானதை எப்பொழுதும் உணர்த்திக் கொண்டு தான் இருக்கும். பசி, தாகம், வலி, உடல் வளர்ச்சி இது போன்று உடல் ஒவ்வொரு நிலையிலும் தனக்குத் தேவையானவற்றை உடல் உணர்த்திக் கொண்டுதான் வரும். நாம் தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  பசித்த பின்பு புசி என்பது தான் இயற்கை. பிறந்த குழந்தையாக இருக்கும் போது கூட நாம் பசியை உணர்ந்து தான் அழுகிறோம். இதைப் போலத் தான் திருமணமும். ஆனால் இன்று நிலையை மாற்றி வைத்துள்ளோம். உடலைப் புரிந்து கொள்ளாமல் வெறும் வயது என்ற வருடங்களை வைத்தே நாம் திருமணங்களை நியாயப் படுத்துகிறோம்.

உடலும் மனமும் பலமா பலவீனமா என்பதை கிரகங்கள் உணர்த்தி விடுகின்றன. நாம் தான் உணர வேண்டும். குருவும் சுக்கிரனும் இரண்டு சுப கிரகங்கள்.  குழந்தைப் பாக்கியத்தை குறிக்கும் சுப கிரகம். சராசரியாக வருடத்திற்கு ஒரு ராசியில் அமர்ந்து பலன்களை உரைக்கின்றது.  ஆனால் மற்றொரு சுப கிரகமான சுககிரன் சராசரியாக மாதத்தற்கு ஒரு முறை ராசி விட்டு ராசி மாறிக் கொண்டே வருகிறது. சுக்கிரன் காதலுக்கும் காமத்திற்கும் அதிபதி.  4ம் பாவம் கட்டில் மோகத்திற்கான பாவம். 4ம் பாவத்திற்கு பலனாக 4க்கு 2ம் பாவமான 5ம் பாவம் குழந்தை பாக்கியம்.  உயிரணுக்களுக்கு சுக்கிரனும் செவ்வாயும் காரகமாகிறார்கள். சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கமோ கிரகயுத்தமோ ஆகும் போது உயிரணுக்களில் உற்பத்தியில் குறைபாடுகள் வரலாம்.  சுக்கிரன் சந்திரனுடன் சேர்ந்து ஒரே பாகையில் இருக்கும் போது உயிரணுக்களில் வீரியத்தில் குறைபாடுகள் வரலாம்.   ஆனாலும் முறையான சிகிச்சையினால் முழுப் பலனைப் பெறமுடியும். இது இயற்கையின் வழி.

அனைத்தும் சரியாக இருந்தும் குழநதை பிறக்க வில்லையென்றால் மனத்திற்குத் தான் சிகிச்சை அளிக்க வேண்டும். உடலுக்கு அல்ல. மனதின் எண்ணங்கள் வெளிப்படுத்துவதைத் தான் உடல்கள் பிரதி பலிக்கின்றன. உடல்கள் உணர்த்துவதைத் தான் செயல்கள் பிரதிபலிக்கின்றன. சுக்கிரனும் செவ்வாயும் பலமாக இருந்தால் நிச்சயம் சந்ததி உண்டு. சுமாரான பலத்துடன் இருந்தாலும் குழந்தை பாக்கியம் தாமதமாகவாது கிடைத்துவிடும். இரண்டு கிரகங்களும் 6, 8, 12 ஆக அமைந்து அல்லது நீசம் பெற்று பகை பெற்று இருந்தாலும் குரு, இலக்கிணம், 5ம் பாவாதிபதி இவர்களில் யாராவது ஒருவர் பலமாகிஇருந்தால் கூட மருத்துவத்திற்கு பிறகு பாக்கியம் உண்டு. இதையும் தாண்டி, 99.9999 சதவீதம் வாய்ப்பில்லாத நிலையில் சூரியன், ஒன்பதாம் பாவம் 5ம் பாவம், 3ம் பாவம் சரியாக அமைந்த குழந்தையை தத்து எடுத்து உடன் வளர்த்து வர வாய்ப்புகள் பிரகாசமாகும். சூரியன் சுக்கிரன் தாக்கத்திற்கு உடலிற்கும், சந்திரன் சுக்கிரன் தாக்கத்திற்கு மனதிற்கும் இயற்கை வைத்தியமளித்தால் மிக விரைவில் தகுதியுள்ள அனைவரும் பெற்றோராகிவிடலாம்.

நன்றி.

Monday, December 16, 2013

காதல் திருமணம் வெற்றிபெறக்கூடிய விதியும் விளக்கமும்.


காதல் திருமணம் வெற்றிபெறக்கூடிய விதியும் விளக்கமும்.

தனக்கு வரவிருக்கும் குடும்பத் துணையை தானே தேர்ந்தெடுத்தல் காதல் திருமணமாகும். அதே துணையை பெற்றோரோ அல்லது மற்றவர்களோ தேர்ந்தெடுத்துக் கொடுப்பது நிச்சயிக்கப்பட்ட திருமணம். காதல் என்ற ஒரு உணர்வு ஏற்படுவதற்கு மனமும் சூழ்நிலைகளும் காரணமாக அமைகின்றன. பயமும் தைரியமும் மனத்தின் வெளிப்பாடாகவும், நண்பர்களும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் சூழ்நிலையின் வெளிப்பாடாக அமைகின்றன.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஜோதிடம் முன்கூட்டியே தெரிவித்துக்கொண்டு தான் இருக்கிறது. காதல் வசப்படுவதற்குரிய மனமும் சூழலும் எவ்வாறு அமையும் என்பதை ஜாதகம் எடுத்துக்காட்டிவிடும். மனம் மற்றும் சூழ்நிலை இந்த இரண்டிற்கும் ஜோதிட காரணிகள் என்ன என்பதைக் காணலாம்.

காதலுக்கு முக்கிய காரணியாக அமைவது மனம். அந்த மனத்திற்கு காரகர் சந்திரன். எதிர்ப்பு வரக்கூடிய செயல் என்று தெரிந்தும் அச்செயலைச் செய்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது தான் 3ம் இடம் தைரிய ஸ்தானம்.
காதலுக்கு மற்றொரு முக்கிய காரணி சூழ்நிலை, சூழ்நிலை என்பது நமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளக்கூடிய புத்திசாலித்தனம். ஜோதிடத்தில் புத்திசாலித்தனம் என்பது 5ம் இடமாகவும் காதலுக்குரிய வாய்ப்புகள் என்பது வாழ்க்கைத்துணைக்கான 7ம் இடமாகவும் கருதப்படுகிறது. கிரகங்களில் செவ்வாயும் சுக்கிரனும் புதனும் முக்கியமாகக் கருதப்படுகிறது. பெண்களுக்கு களத்திரம் செவ்வாயாகவும் ஆண்களுக்கு சுக்கிரனாகவும் இருவருக்கும் உள்ள உறவு முறைகள் புதனாகவும் அமைகிறது.

மேற்கூறிய கிரகங்களும் பாவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருக்கும் பொழுது காதல் வயப்படுதல் நிச்சயம். அது திருமணத்தில் முடியுமா அல்லது ஒரு தலைக் காதலாகவே முடிந்துவிடுமா அல்லது காதல் வேறு திருமணம் வேறு என்ற நிலையைத் தருமா என்பதையெல்லாம் அவரவர் திசாபுத்திஅந்தர காலங்களை வைத்து கூறிவிடமுடியும்.

பொதுவாக மூன்றாம் இடத்தில் தேய்பிறைச் சந்திரனும், 5 மற்றும் 7ம் இடங்களில் செவ்வாய் சுக்கிரன் புதன் (ஏதேனும் ஒரு கிரகம் வக்கிரத்தில்) இருக்கக்கூடிய சூழ்நிலைகள் காதலிலும் திருமணத்திலும் வெற்றியைத் தருவதில்லை. திருமணத்தில் வெற்றி பெறும் ஜாதகங்கள் மட்டுமே காதலிலும் வெற்றி பெறும். அப்படி இல்லையென்றால் திருமண வாழ்க்கையோ அல்லது காதல் வாழ்க்கையோ விரைவில் முடிவுக்கு வந்து விடும். அதனால் ஆண் பெண் இருவருடைய ஜாதகத்திலும் (குறைந்தபட்சம் ஒருவருடைய ஜாதகத்திலாவது) திருப்தியான மண வாழ்க்கைக்குரிய கிரக அமைப்புகள் இருந்தால் நிச்சயம் எதிர்ப்புகளையும் மீறி திருமணம் செய்து கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் பெற்றோரிடம் பொறுப்பை ஒப்படைப்பது சிறந்த முடிவாகும். எதிர்ப்பால் சாதிக்க முடியாததை அன்பாலும் ஆசிர்வாதத்தாலும் சாதிக்க முடியும்.

நன்றி.

Thursday, October 24, 2013

திருமணம் தாமதமாவதற்கு ஜாதகம் காரணமா?

திருமணம் தாமதமாவதற்கு ஜாதகம் காரணமா?

திருமணத்திற்கு வரன் பார்க்கும் படலம் வருடக்கணக்கில் நீடிப்பதற்கு என்ன காரணம்?. நாம் எதிர்பார்ப்பது கிடைக்கவில்லை என்பது தான். எதிர்பார்ப்பு என்பது ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் மாறு படலாம். படித்த வரனாக வேண்டும் என்பது பையனுடைய கனவாக இருக்கலாம். ஆனால் நகை அதிகம் போட்டு வரவேண்டும் என்பது அன்னையின் ஆசையாக இருக்கலாம். பெண் வீட்டுக்காரர்கள் அடக்கமாக இருக்க வேண்டும் என்று அப்பா நினைக்கலாம். இப்படி ஒவ்வொருவரும் ஒரு எதிர்பார்ப்புடன் தான் திருமணத்திற்கு வரன் தேடுகிறார்கள். இதற்கு பொதுவான காரணமாக ஜாதகம் சரியில்லை என்ற சொல்லை முன் வைக்கின்றனர். நாங்கள் பார்த்த இடத்தில் ஜாதகப் பொருத்தம் சரியாக உள்ளது என்று பெண் வீட்டில் கூறினால், இல்லை இல்லை எங்கள் ஜோசியர் செய்யக்கூடாது என்று கூறிவிட்டார் என்று ஜோதிடர் மீது பழியைப் போட்டுவிடுகின்றனர். ஜாதகப் பொருத்தம் மட்டும் பார்த்தால் நிச்சயமாக யாருக்கும் திருமணம் தாமதமாகாது. அதையும் தாண்டிய எதிர்பார்ப்புகள் தான் தாமதத்திற்கு காரணம். அந்த எதிர்பார்ப்புகள் எப்படி அமைகின்றன? யாரால் இந்தத் தாமதம்?

இந்தக் கட்டுரையின் நோக்கம் யாரையும் குறைசொல்லவது அல்ல. நம்முடைய சூழ்நிலையைப் புரிந்து கொள்வது தான். நம்மையும் மீறி சில செயல்கள் நடைபெறுகின்றன. நம் நம்பிக்கைக்குரிய நபர்கள் நமக்கு எதிராக செயல்படுவதும், நமக்கு ஆகாது என்று நினைப்பவர்கள் உண்மையில் நல்வர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. நம்மால் உறுதியாக முடிவெடுக்க முடியாத நிலையில் ஜோதிடம் கைகொடுக்கிறது. உண்மையைப் புரிய வைக்கிறது. இது அனுபவத்தில் கண்ட உண்மை.

நன்கு படித்த வேலையில் உள்ள ஒரு ஜாதகருக்கு ஐந்து வருடத்திற்கு மேலாக வரன் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் ஜாதகங்களுக்கு மேல் பொருத்தம் பார்த்தாகிவிட்டது. இன்னும் அமையவில்லை. காரணம் என்ன என்று கேட்டால் களத்திர தோச ஜாதகம் அதனால் அமையவில்லை என்று பதில் வருகிறதாம். இதற்கான காரணம் என்ன? இதனை எப்படி சரிசெய்வது என்று அந்த ஜாதகர் கேட்டிருந்தார். அந்த ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் தாமதத்திருமண நிலைதான் இருந்தது. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது தான் ஜாதகரின் கேள்வி.

ஜாதகத்தில் உள்ள நிலைகள்.

கேமத்துருவ யோகம். – சந்திரன் இருக்கும் இராசிக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இல்லாத நிலை. இந்த நிலையில் உள்ளவர்கள் எளிதில் எதிலும் ஏமாறும் தன்மை உடையவர்கள்.

ஏழாம் இடத்தை பாதிக்கும் கிரகங்கள். – செவ்வாய், புதன், சந்திரன்.

செவ்வாய் – சகோதர சகோதரிகள்.
புதன் – கல்வி, மாமன்மார்க்ள.
சந்திரன் – சுய புத்தி – தாய்.

மேலே உள்ள நிலைகளை ஒன்று சேர்த்து பார்த்த போது ஒரு விடை கிடைத்தது. தாய் மற்றும் தாய் வழி மாமன்கள், சகோதர சகோதரிகள் மற்றும் அவரது கணவன் மற்றும் குடும்பம்., ஜாதகரின் சுய முடிவு. இந்த மூன்று பேரும் தான் திருமணம் தாமதமாவதற்கு காரணம். எப்படி இந்தக் காரணம் காரியமாக மாறுகிறது என்பதைப் பார்ப்போம்.

இந்த ஜாதகருக்கு வரும் வரன்களில் சரி பாதி பொருத்தம் உள்ள ஜாதகங்கள் தான் வருகிறது. இதில் தன் படிப்புக்கேற்ற வரன் இதுஇல்லை என்று ஜாதகர் சிலவற்றை மறுத்துள்ளார். பெண் அழகாக இல்லை என்று சில வரன்களை தாய் மறுத்துள்ளார். தனது மகளை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி மூத்த சகோதரி வற்புறுத்துகிறார். இப்படி இந்த சூழ்நிலைகள் தான் ஜாதகரின் திருமணத்தை தாமதப்படுத்திக் கொண்டு வருகின்றன.

ஜாதகருக்கு வாழ்க்கையில் நடந்து கொண்டிருப்பதைத் தான் ஜோதிடம் விளக்கியுள்ளது என்று விளக்கிய பின்பு தான் ஜாதகருக்கு தெளிவு பிறந்தது. இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு என்ன வழி என்று கேட்டார்.

ஜாதகருடைய திருமண வாழ்க்கையில் மாமனார் குடும்பத்துடன் இணக்கமான சூழ்நிலையில் இருக்க முடியாது. இதனால் திருமணவாழ்வில் சங்கடங்கள் குழப்பங்கள் ஏற்படும். இதனை மாற்ற முடியாது. அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இது அவருடைய விதி.

ஜாதகப் பொருத்தம் சரியாக இருந்தால் சகோதிரியின் மகளை திருமணம் செய்துகொள்வது சரியான தீர்வாக இருக்கும். குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை முடிந்தளவு குறைப்பதற்கு இது சரியான முடிவாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஜோதிட ரீதியாக தாமதத் திருமணத்திற்கான விளக்கமும் விடையும் கொடுத்துவிட்டோம். இதற்கான வேறு பல தீர்வுகளும் இருக்கலாம். அல்லது வேத ஜோதிடத்தின் தீர்வுகளில் திருத்தங்கள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் உங்களின் கருத்தக்களை எதிர்பார்க்கிறோம்.

நன்றி.

Friday, October 18, 2013

அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு – விதியை மதி வென்றுவிடுமா?

குழந்தை பிறக்கும் நேரத்தை நிர்ணயிப்பது யார்?

குழந்தை தான்.

நம்முடைய முன்வினைப் பயன்படி தான் இப்பிறவியில் நாம் பிறக்கிறோம். தாயும் தந்தையும் கருவிகள் தான். அவர்கள் நிர்ணயிப்பதில்லை. இன்றைய காலகட்டத்தில் அறுவைச்சிகிச்சையின் மூலம் குழந்தைப் பிறப்பு என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் குழந்தையின் பிறந்த நேரத்தை முன்கூட்டியே நிர்ணயம் செய்து நல்ல நேரம் காலம் பார்த்து குழந்தையை பெற்றெடுக்கின்றனர். இதன் மூலம் குழந்தைக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்துவிட முடியும் என்று எண்ணித்தான் பெற்றோரும் செயல்படுகின்றனர். அவர்களின் எண்ணங்கள் மேலானது தான். ஆனால் அது உண்மையில்லை.

கருவானது தாயின் கருவறையில் நல்ல முறையில் வளர்ந்து போதிய கால இடைவெளியில் தானாகவே தன்னை வெளிப்படுத்துக்கொள்ளும். அப்படி இயலாத நிலையில் தாயின் உடல்நிலையையும் குழந்தையின் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு அறுவைச்சிகிச்சையின் மூலம் குழந்தைப்பிறப்பு நிகழ்கிறது. இதில் தவறில்லை. இதனால் குழந்தையின் விதி நிர்ணயிக்கப்படுகிறதா என்றால் இல்லை. குழந்தை பிறப்பு என்பது ஒரு உயிரின் பிறப்பு ஒரு ஆன்மாவின் அவதாரம். இதை வேறு யாரும் நிர்ணயிக்க முடியாது.

விதியின் விளைவாகவே கரு உருவாகிறது. விதியின் படிதான் வளர்கிறது, வெளிவருகிறது. இந்தக் குடும்பத்தில் இவர்களுக்கு பிள்ளையாகப் பிறந்து இப்படியெல்லாம் வாழப்போகிறோம் என்ற சூழ்நிலை உருவாவது குழந்தைபிறப்பின் போது மட்டுமே நடைபெறும் நிகழ்வல்ல. ஏற்கனவே இறுதிசெய்யப்பட்ட நிகழ்வு. புகழ் பெற்ற மனிதருக்கு பிறந்த குழந்தைகள் வெளி உலகிற்கு தெரியாமல் போவதுண்டு. வெளி உலகத்திற்கு தெரியாமல் உள்ள பெற்றோருக்கு பிறந்த குழந்தைகள் புகழ் பெற்று வாழ்ந்ததும் உண்டு. இது அவர்கள் பிறந்த நேரம் என்று பொதுவாகச் சொல்வதுண்டு. உண்மை தான். ஆனால் அந்த நேரம் யாரும் நிர்ணயித்தது இல்லை.

குழந்தை எந்த நேரத்தில் பிறந்தாலும் அது உண்மையில் நல்ல நேரம் தான். இராகு காலம், அம்மாவாசை, ஆயில்யம் நட்சத்திரம் இது போன்ற காலங்களில் குழந்தை பிறந்தால் அது குழந்தையின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்ற கருத்து முற்றிலும் தவறானது. எல்லா காலமும் நல்ல காலம் தான். வெயில், மழை, காற்று, பனி இப்படி எல்லா காலநிலைகளும் தேவைதான். எந்தக் காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தால் எல்லா காலநிலைகளும் நல்லது தான். அது போலத்தான் ஜோதிடமும். ஒவ்வொரு திசா புத்தி அந்தர காலங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தால் வாழ்க்கை என்றென்றும் திருப்தியாக இருக்கும்.

நன்றி.

Thursday, August 22, 2013

விதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது?

விதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது?

எந்த ஒரு செயலும் மற்றொரு செயலாலேயே தான் தூண்டப்படுகிறது என்ற தத்துவமே விதியின் விளையாட்டு.

இதை யார் எங்கே ஆரம்பித்திருப்பார்கள்?

விதியின் விளையாட்டிற்குள் வருவன எல்லாம் உயிர்களே. உயிர்கள் என்றால் என்ன? எந்த ஒரு பொருள் தனியாகவோ அல்லது தன்னை ஒத்த மற்றொரு பொருளுடன் சேரந்து தன்னை ஒத்த ஒரு புது உயிரை உறுவாக்குமானால் அது தான் உயிர் எனப்படும். அப்படிப்பட்ட எல்லா உயிர்க்கும் பொதுவானது தான் விதி. உயிர் இல்லாத அனைத்தும் இயற்கை.

இயற்கை எப்படி முதல் உயிரை உருவாக்கியிருக்கும் என்பது தெரியவில்லை. தன்னைத் தானே உற்பத்தி பன்னக்கூடிய மற்றொரு உயிரை உறுவாக்கக்கூடிய திறனுடன் கூடிய அந்த முதல் உயிர் தான் இன்று நாம் மற்றும் நம் கண்ணால் காணக்கூடிய மற்றும் காணமுடியாத உயிரினங்கள். இவையனைத்திற்கும் பிறப்பும் உண்டு இறப்பும் உண்டு.

ஒவ்வொரு உயிருக்கும் இயற்கையாகவே படைக்கும் சக்தி அளிக்கப்பட்டு இறுக்கிறது. அந்த படைக்கும் செயலைச் செய்ய தேவைப்படும் சக்தியை பெறுவதற்காக அனைத்து உயிர்களும் ஒரு சில செயல்களைச் செய்கின்றன. அந்த செயல்கள் தான் முயற்சிகள். அந்த முயற்சிகளின் விளைவு தான் விதி.

உயிர்கள் மற்றும் இயற்கை என்ற இரண்டு பிரிவுகள் தான் உள்ளன. உயிர்கள் தான் வளர்ச்சி அடைய எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் இயற்கையை சார்ந்து இருக்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை. இயற்கையும் உயிர்களைச் சார்ந்திருக்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை. அதே சமயம் உயிர்களுக்கும் உயிர்களுக்கும் இடையே நிகழும் செயல்கள், இயற்கைக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் செயல்கள் மற்றும் இயற்கைக்கும் உயிர்களுக்கும் இடையே நடக்கும் செயல்கள் தரும் பாதிப்பு பெருமளவில் இருப்பதால் அதைத் தான் விதி என்கிறோம்.

விதியும் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இயற்கையும் இயற்கை சார்ந்த விதியும், உயிரும் உயிர் சார்ந்த விதியும். இயற்கையில் எண்ணற்ற பொருள்கள் உள்ளன. இயற்கையின் விதியால் இயற்கை உருவாகிறது. உயிர்களின் விதியால் உயிர்கள் உருவாகுகின்றன. பல்வேறு யுகங்கள் பல கோடிக்கணக்கான வருடங்களில் இயற்கையிலும் உயிர்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. இயற்கைதான் மூலம் என்பதால் இயற்கையின் விதிதான் முதலில் செயல்படும். உயிர்களின் விதி இயற்கைக்கு கட்டுப்பட்டதே.

ஜோதிடமும் தனிமனிதனுக்கு என்றும் இயற்கைக்கு என்றும் இரண்டு வகைப்படும். தனிமனிதனுக்கு கூறப்படும் பலன்கள் இயற்கைக்கு உட்பட்டது தான். இயற்கையின் பலன்கள் தான் முதலில் செயல்படும். சுனாமியினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சுய ஜாதகப் பலன்கள் வெவ்வேறாக இருந்திருக்கலாம். ஆனால் இயற்கையின் விளைவாக அங்கு சென்ற அனைவருக்கும் இயற்கையின் விதி விளையாடியிருக்கிறது.

விதி இயற்கையில் தான் உருவாகியிருக்கிறது. இயற்கையில் தான் முடிவாகும். இதுவரை விதி என்பது செயலின் (வினையின்) விளைவு என்ற பொருளில் கண்டோம். விதியின் படிதான் அனைத்தும் நடக்கும் என்றால் என்ன? விளைவுகள் எப்படி உயிர்களை ஆட்டுவிக்கிறது? இறப்பிற்குப் பின்னும் பிறப்பிற்கு முன்னும் என்ன நடக்கிறது?

தொடரும் …

Thursday, June 20, 2013

ஜோதிடக் குறிப்புகள்

ஜோதிடத்தை முழுமையாக தெரிந்து கொண்டவர்கள் தற்காலத்தில் யாரும் இருப்பதாகாத் தெரியவில்லை. ஆனால் விடாமுயற்சியாலும் தீராத தேடுதலாலும் நல்ல எண்ணங்களாலும் ஜோதிடத்தை அதிகமாக உணர்ந்தவர்கள் இருக்கிறார்கள். தேடுதல்களுக்கான விடைகள் யார் மூலமாவது எப்படியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் தேடுகின்றோம். அப்படி தேடுபவர்களுக்கு உதவியாக தெரிந்ததை உணர்ந்ததை யாம் எழுதி வருகிறோம். அவற்றின் சிறு தொகுப்பாக இந்தப் பதிவு. 

விதியை வெல்ல முடியாது. அதற்கு பரிகாரங்களும் கிடையாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று கிடையாது.ஆனால் அதை எவ்வாறு நாம் அனுபவிக்கப் போகிறோம் என்பது தான் ஜோதிடம் கூறும் சூட்சுமம். மேலும்...


மூலம் ஆயில்யம். நட்சத்திரங்களால் பெண்களின் புகுந்த வீட்டிற்கு தீங்கு வருமா?

 

வராது. ஒருவருடைய வாழ்க்கையின் முழுப்பங்கும் அவருடைய ஜாதகத்தை வைத்தே கணிக்கப் படுகிறது. மேலும் சாதாரண நிலையில் அடுத்தவர்களின் இராசியோ நட்சத்திரமோ மற்றவர்களிடம் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. எப்பொழுது இருவருக்கும் இடையில் ஒரு பிடிப்பு, ஒரு பந்தம், ஒரு உறவு ஏற்படுகின்றதோ அப்பொழுது தான் ஒருவரின் ஜாதகம் மற்றவர்க்கு பயன்படுகிறது. தொடர்ந்து…

 

தொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்

 

ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய தொழிலிருந்து தான் கிடைக்கப் பெறும். வெற்றி என்பது என்ன? நாம் செய்யும் செயல்கள் நாம் எதிர்பார்த்த விளைவுகளைத் தருமானால் அது வெற்றி. அது தான் மனிதனின் சந்தோசம், மகிழ்ச்சி. மனிதன் மகிழ்ச்சியுடன் வாழத் தேவைப்படும் அனைத்தையும் தொழிலின் மூலமே பெறுகிறோம். பிறந்த குழந்ததையின் தொழில் என்ன? உண்ணுவதும் உறங்குவதும் தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு அது தான் தொழில். தேர்ச்சி பெறுவது தான் வெற்றி. மேலும்…



ஜனனத்திற்கு முந்தைய நிலையிலிருந்து மரணத்திற்கு பிந்தைய நிலைவரை ஜோதிடத்தில் கூறமுடியும். அப்படிக் கூறுவதற்கு உண்மையான பக்தி இருக்க வேண்டும். பக்தி என்பது இறைவனிடம் மட்டும் தான் என்பதில்லை. தன்னைத் தான் உணர்தலே இறைவனை அடைவதற்குச் சமம். சாமானிய மக்கள் தான் இறைவனைத் தேடி ஓடுகின்றனர். தன்னை உணர்ந்தவனிடம் இறைவன் தானே வந்து சேர்கிறான். தொடர்ந்து….

 

Monday, January 21, 2013

வாழ்வியல் தடைகளும் – ஜோதிடத்தீர்வுகளும்

வாழ்வியல் தடைகளும் – ஜோதிடத்தீர்வுகளும்

ஒருவர் திருப்தியாக வாழ்வதற்கு தடையாக இருக்கும் அனைவற்றிற்கும் காரணம் அவரே தான் முற்பிறவியில் செய்த வினைப்பயனை அனுபவிக்கவே இப்பிறவி எடுக்கிறோம். கடந்த பிறவியிலேயே முழுவதும் அனுபவித்திருந்தால் இப்பிறவி ஏற்பட்டிருக்காது. சரி. இப்பொழுது பிறந்துவிட்டோம். பிரச்சனைகளும் வந்து விட்டது எப்படி தீர்வு காண்பது?

ஒருவருக்கு நிகழக்கூடிய விளைவுகளை மட்டும் ஜோதிடம் கூறவில்லை. அதற்குரிய விடைகளையும் கொடுத்துள்ளது. நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உதாரண ஜாதகம்
ரிசப இலக்கினம் – துலாம் இராசி 


இவரின் முதல் கேள்வி – எனது மனம் உறுதியான நிலையில் இல்லை. இது தான் இவரின் பிரச்சனை. ஆனால் இது தான் இவரின் பலம். தன்னுடைய பலவீனம் என்ன என்பதைத் தெரிந்தவன் தான் தன்னுடைய பலத்தையும் உணரமுடியும்.

இந்த நிலை ஏன் என்பதற்கு ஜோதிடம் கூறும் காரணம். இலக்கினத்திற்கு 6ல் சந்திரன். சந்திரன் மனதைக் குறிக்கும் கிரகம். ஆறாம் இடம் மறைவு, நோய், வழக்கு இது போன்றவற்றைக் குறிக்கும் இடம். ஆறாம் இடத்தில் சந்திரன். மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுமாற்றம் வரத்தான் செய்யும். ஆனால் இவருக்குத்தான் அது முன்னேற்றத்தின் தடைக்கல்லாக அமைந்துவிட்டது.

சந்திரன் மட்டும் தான் காரணமா?
எப்பொழுது தைரியம் குறைகிறதோ அப்பொழுது மனம் தடுமாற்றம் அடையும். பயம் உண்டாகும். எதையும் உறுதியுடன் செய்ய தயங்குவோம். தேவையில்லாமல் சந்தேகம் கோபம் வரும். தைரியம் தரும் பாவம் 3ம் பாவம் அங்கு இருக்கும் செவ்வாய் நீசம். நீசம் பெற்ற செவ்வாய் 4ம் பார்வையாக மனோகாரன் சந்திரனைப் பார்க்கிறது. தேவையான தைரியம் இல்லாதால் மனம் குழப்பத்தில் உள்ளது. 

மனத்தடுமாற்றம் உள்ள அனைவருக்கும் என்ன தான் தீர்வு. வாழ்க்கை முழுவதும் இதே நிலைதானா? இதற்குத் தீர்வு இல்லையா? 

இருக்கிறது. அதுவும் ஜோதிடத்திலிருந்துதான் கிடைக்கப்  பெறப்போகிறோம். முடிவு எடுக்கும் திறனை வளர்த்துக்கொண்டால் இந்த பிரச்சனையை சமாளித்துவிடலாம். எப்படி வளர்த்துக் கொள்வது.? நம்மால் ஒரு செயல் செய்ய முடியாத பொழுது, அச்செயலை செய்ய தகுதியுடைய ஒருவரின் மூலமாக நாம் செய்து கொள்கிறோம். அதே போலத்தான் நம்முடைய முடிவை மற்றொருவரின் மூலமாக செய்து கொள்ளலாம். அப்படி யார் மூலம் நமக்கு ஆதாயம் வரும்?

ஜாதகத்தில் சூரியன் ஆட்சி. புதன் ஆட்சி. சனி உச்சம். இப்படி வலுவான கிரகங்கள் உள்ளன. இதில் சனியும் சூரியனும் பலம் பெற்றவையாக உள்ளன. சூரியன் தந்தைக்குரிய கிரகம். பொதுவாக தலைமைப் பண்பு கொண்ட கிரகம் நல்ல நிலையில் இருப்பதால் உங்களின் முடிவுகளை அவரிடம் கேட்டு நடப்பது சிறந்தது. சுக்கிரன் – மனைவிக்கு காரகர். அவர் சூரியனுக்கு அடுத்த நல்ல நிலையில் உள்ளார். மனைவியின் ஆலோசனை நம்பிக்கையைத் தரும். நண்பர்களின் ஆலோசனை நல்ல அனுபவத்தைத் தரும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் நன்றாக சிந்திக்கக்கூடியவர் தான். ஆனால் நிதானம் மட்டும் கொஞ்சம் குறைவாக இருக்கும். காரணம் புத்தி காரகன் புதன்- ஆட்சி ஆனால் வக்கிர நிலை. இதை நிவர்த்தி செய்ய உங்களை நீங்கள் புரிந்து கொள்ள தினசரி நடப்பவற்றை டைரியில் எழுதுங்கள் அப்பொழுது உங்களின் சிந்தனை என்ன தவறு எங்கே நடக்கிறது என்பது புரிய வரும். உங்கள் முடிவுகளை ஞாயிற்றுக்கிழமைகளில் (சூரியனுக்கு உகந்த நாள்) அமைதியாக இருக்கும் சூழ்நிலையில் எடுத்தால் வெற்றி நிச்சயம். சந்திராஷ்ட தினங்களில் கவனமாக இருங்கள். தினமும் உங்கள் வாழ்க்கையில் உங்களால் நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து பெருமைப்படுங்கள். அது நடந்த சூழ்நிலை அதை தாங்கள் நடத்திய விதம் இவற்றை நினைத்துப் பார்த்தால் தங்களின் கேள்விகளுக்கு விடை தானாக கிடைத்துவிடும்.

Wednesday, November 28, 2012

திருமணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்.

திருமணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்.

விதிக்கப்பட்டதை அனுபவிப்பதேயன்றி வேறுஒன்றும் செய்வதற்கில்லை. அப்படியானால் நம்முடைய முயற்சி, வேண்டுதல்கள், தியாகம் இவற்றிற்கெல்லாம் என்ன பயன்?
பரிகாரங்கள் என்ற ஒன்று இல்லவே இல்லையா? என்றால்,  இதற்கெல்லாம் பதில் விதியை அனுபவிப்பது தான். ஆனால் நம் விருப்பப்படி அனுபவிப்பது. அது எப்படி?

அனைவருடைய திருமண வாழ்க்கையிலும் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்சனைகள் இல்லாத் வாழ்க்கை இல்லவே இல்லை. காரணம் தனிமனிதனாக இருக்கும் போது நாம் ஒருவர் மட்டும்தான். நம்முடைய பிரச்சனைக்குரிய தீர்வு நாம் மட்டும் எடுப்பதே ஆகும். அதே சமயம், திருமணத்திற்குப்பின் தன்னுடைய மனைவி அல்லது கணவன் குழந்தைகள் இவர்களின் மனநிலையையும் அவர்களின் தேவைகளும் சேர்ந்து கொள்கிறது. நம்முடைய தீர்வு நம் குடும்பத்தாருடன் ஒத்துப் போவதில்லை அது தான் பிரச்சனை.

இதற்கு தீர்வு விட்டுக்கொடுத்தல், தியாகம், இவையெல்லாம் தான். இதற்கு உளவியல் தீர்வு போதுமே எதற்கு ஜோதிடம் என்று கேட்போரும் உண்டு. வெறும் உளவியல் முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. ஜோதிடத்தில் திருமணப் பொருத்தம் பார்ப்பதும் அதற்காகத்தான். நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே திருமணப் பொருத்தம் ஆகாது. முழுஜாதகத்தையும் பொருத்தி பார்க்க வேண்டும்.

திருமணம் நடந்தபின்பு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல்வதற்கு முன். பிரச்சனைகள் என்ன என்பதை ஆராயலாம். பிரச்சனைகளை நாம் நான்காக வகைப்படுத்தலாம்.

  1. அறம் சாரந்த பிரச்சனைகள்
  2. பொருள் சார்ந்த பிரச்சனைகள்
  3. இன்பம் சார்ந்த பிரச்சனைகள்
  4. மோட்சம் சார்ந்த பிரச்சனைகள்

அறம் சார்நத பிரச்சனைகள்.
அறம் என்பது என்ன? மனம், கல்வி, புத்திசாலித்தனம், முடிவுஎடுக்கும் திறன். நியாயம் தரமம் இது போன்றவை. அதாவது நாம் எடுக்கும் முடிவு குடும்பத்திற்கு ஒத்துப் போகாமல் வரும் பிரச்சனைகள்.

பொருள் சார்ந்த பிரச்சனைகள்
பணம், வீடு, வாகனம், தொழில் இது போன்ற பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள்.

இன்பம் சார்நத பிரச்சனைகள்
காதல், காமம், ஆடம்பரம், இலாபம் இது போன்ற உடல் சார்ந்த மனமும், மனம் சாரந்த உடலினாலும் ஏற்படும் பிரச்சனைகள்.

மோட்சம் சார்ந்த பிரச்சனைகள்
இறப்பு, மறுபிறப்பு, தொடர்பான பிரச்சனைகள். சாதாரண மனித வாழ்க்கையில் இது இடம் பெற வாய்ப்பில்லை. காரணம் யாரும் இறந்தபின்பு சொர்க்கமா நரகமா, மோட்சமா? மறுபிறப்பா என்பதற்கு மட்டும் சண்டை போட்டுக்கொள்ள மாட்டார்கள்.

உண்மையில் பிரச்சனைகள் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் அதற்கான தீர்வைக் காண முடியும். மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? மனித வாழ்க்கையின் செயல்பாடுகள், தேவைகள் இவற்றை ஜோதிடத்தில் 12 பாவங்களாகப் பிரித்து பலன் காண்கிறோம். மேற்கூறிய பிரிவுகளும் ஜோதிடப் பாவங்களும் அதாவது ஸ்தானங்களும் என்ன என்றால்?

அறம் சாரந்த ஸ்தானங்கள் – 1, 5, 9
பொருள் சார்ந்த ஸ்தானங்கள் – 2, 6, 10
இன்பம் சார்ந்த ஸ்தானங்கள் – 3, 7, 11
மோட்சம் சாரந்த ஸ்தானங்கள் – 4, 8, 12


பிரச்சனைகள் எப்பொழுது வரும் என்று தெரிந்தால் தான். அதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய ஏதுவாக இருக்கும். ஜோதிடம் என்பது எதிர்கால வாழ்க்கைக்கான வழிகாட்டி. எந்த காலகட்டங்களில் நாம் எவ்வாறு நடந்துகொள்ளப் போகிறோம் அல்லது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கூறுவது தான் ஜோதிடம். அந்த காலகட்டங்களை ஜோதிடத்தில் திசா புத்தி அந்தரம், என்ற ஜோதிடக் கணிதத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

கணவனுக்கும் மனைவிக்கும் தனித்தனியாக நடக்கும் திசாபுத்தி அந்தர அதிபதிகளின் சேர்க்கை சுபமானால் பிரச்சனைகளுக்குரிய தீர்வு கிடைத்துவிடும். இல்லையென்றால் சிறு விவாதம் கூட பெரிய பிரச்சனையாகி பிரிவு என்ற நிலைவரை வந்து விடும்.

சில சமயம் என்ன பிரச்சனை எதற்காக கோபப்படுகிறார்கள் என்பதே தெரியாத நிலையில் எந்த தசாபுத்தி அந்தரம் நடக்கிறதோ அதன் காரகத்துவங்களில் தான் கோபம் வரும் உதாரணமாக 3, 7, 11ம் சூட்சும அந்தர காலங்களில் காதல், காமம்,அந்நியோன்யம்,  திருப்பியின்மையினாலும் கோபம் வரும் அதைப் புரியாமல் நீங்கள் கோயில் கோயிலாக சுற்றினால் உங்கள் மேலும் கடவுள் மேலும் கோபம் தான் வரும் அப்பொழுது செய்ய வேண்டியது இருவரும் தனியாக சென்று இயற்கையை அனுபவியுங்கள்.

அறம் சார்நத காலகட்டங்களுக்கு தீர்த்த யாத்திரை போவதும், பொருள் சாரந்த காலகட்டங்களில் பொருளாதார சக்திக்கு தகுந்தவாறு சிறு பொருளாவது பரிசாகக் கொடுப்பதும் சிறந்தது.

இவ்வாறு செய்தால் குடும்பத்தில் பிரச்சனை வராதா என்றால் வரும் ஆனால் மறுநாள் அது தீரந்துவிடும். பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும். பிரச்சனை பிரிவு வரைசெல்லாது.

இது தான் ஜோதிடம் கூறும் தீர்வு. ஒவ்வொரு பிரச்சனைகளையும் இவ்வாறு புரிந்து காலகட்டங்களை உணர்ந்து செயல்பட்டால் எல்லா நாளும் திருப்தியாகவே அமையும்.