-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Saturday, November 17, 2012

பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

ஆம்.

எந்த ஒரு கல்விக்கும் ஒரு ஒழுங்கு வரைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும். அனுபவக்கல்வி என்பதும் கூட ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். ஜோதிடம் என்பது வார்த்தையால் விவரிக்கக் கூடிய சாதரண தொகுப்பு அல்ல. வானியலில் துவங்கி மறுபிறவி வரை அனைத்தையும் உள்ளடக்கியது. எந்த ஒரு நிகழ்வும் தூண்டுதலின் பெயரிலேயே நடக்கிறது. எதிர்கால வாழ்க்கை என்பது தான் உண்மை. கடந்த காலம் நாம் அனுபவித்துவிட்டது அதை மாற்ற முடியாது. நிகழ்காலம் என்று ஒன்று கிடையவே கிடையாது. எல்லாம் எதிர்காலம் தான். அப்படிப்பட்ட எதிர்காலத்தை உணர போதிக்கும் ஒரே கல்வி ஜோதிடக் கல்வி தான். அந்த ஜோதிடக் கல்வியை முறைப்படுத்தி கற்றவர்கள் தான் ஜோதிடர்களாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வேண்டியதில்லை. பரம்பரை பரம்பரையாக செய்து வரும் தொழில் என்பதால் அதற்கு கல்வித் தகுதி என்பது தேவையில்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இறையருளால் அருள் வாக்கினால் கூறப்படுவதற்கு கல்வி எதற்கு என்ற கேள்வியும் அர்த்தமற்றது. காரணம் கல்வி முறைப்படுத்தப் படும் போது தான் ஒரு ஒழுங்கு நிலைக்கு வரமுடியும். அனைவருக்கும் அனைத்தும் பொதுவாக முடியும்.

ஜோதிடம் என்பது 12 ராசிகள் 9 கோள்கள் 27 நட்சத்திரங்கள் 108 பாதங்கள், 360டிகிரி பாகை, உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான காலச்சக்கரங்கள் இப்படி எண்ணற்ற தொடர்புகள் கொண்டது ஜோதிடம். ஜோதிடக் கணிதம் என்பது காலக் கணிதம்.  அனைத்துக் காலத்திற்கும் பொதுவானது. ஜோதிடம் என்பது தனியானது அல்ல. வானியல், முகூர்த்தம், தாஜிகம், பிரசன்னம், ஜாதகம், திசாபுத்தி, கோச்சாரம், மேதினி ஜோதிடம்,இரத்தினவியல்,  இது போன்று இன்னும் நிறைய பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பெரும் பிரிவுக்குள்ளும் சின்ன பிரிவுகள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்திற்கு ஏற்றாற் போல, பங்குவர்த்தகத்தில் ஜோதிடம், மருத்துவத்தில் ஜோதிடம், உளவியல், ஆன்மீகம், இப்படி அனைத்துத் துறைகளிலும் எதிர்காலத்தை உணர்த்தவல்ல ஜோதிடம் முறையாக பயிற்றுவிக்கப்பட வேண்டும். அனைவரும் அனைத்து துறையிலும் புலமை பெற முடியாது என்பது உண்மைதான். இருப்பினும் அடிப்படையைத் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம். ஜோதிடத்தின் அனைத்து பிரிவுகளின் சிறு அடிப்படையையாவது தெரிந்து பின்னர் தான் ஜோதிடராக வரவேண்டும். என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் அப்பொழுது தான் ஆராய்ச்சி பெருகும். தேடுதல்களும் தேவைகளும் அதிகரிக்கும். ஜோதிடத்தை முழு நேரத் தொழிலாக வைத்துள்ளவர்களுக்கும் நியாயமான வருமானமும் புகழும் கிடைக்கும். அடிப்படை ஜோதிடக் கல்வி கற்றவர்கள் மட்டுமே ஜோதிடர்கள் என்ற நிலைவருமாயின் தகுதியற்றவர்களிடம் மக்கள் ஏமாறும் நிலை மாற்றப்படும்.

இன்று ஜோதிடத்தை நேரடியாவும் தொலைநிலைக் கல்வி வாயிலாகவும் கற்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஜோதிடக் கல்வியை அரசும் அனைத்து வகுப்புகளுக்கும் கட்டாய பாடமாக்க வேண்டும். ஜோதிடத்திற்கு என்று தனியாக பல்கலைக்கழகம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். ஜோதிட ஆராய்ச்சிக்கு அரசு உதவ முன்வர வேண்டும். அப்பொழுது தான் ஜோதிடத்தின் உண்மைத் தன்மையை மக்கள் உணர்ந்து பயன் பெற முடியும்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி