-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Sunday, May 10, 2020

உறவுகள்

இன்றைய உறவுகள் பெரும்பாலும் மேலோட்ட நிலையிலேயே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் உறவுகள் ஆங்காங்கே பிரிந்து கிடப்பது தான். வாழ்க்கைக்கான நிலைக்களம் ஒரே இடத்தில் அமையாத பட்சத்தில் உறவுகள் தொழிலின் நிமித்தம் திசைக்கொன்றாய் பிரிந்து விடவே செய்கிறார்கள்.

இந்தப்பிரிவு தான் பல உறவுகளின் வேர்களைத் தகர்த்து விடுகிறது. இருக்கிற இடங்கள் தொலைதூரமாகி விடுகிற பட்சத்தில் உறவுகள் இல்லாமலே வாழப் பழகி விடுகிறார்கள்,வாழ்க்கை சூழ்நிலை அந்த அளவுக்கு அவர்களை மாற்றி விடுகிறது என்பதே நிஜமான உண்மை.

இப்படி தனித்து துண்டாடப்படுகிற அந்த குடும்பத்தின் அடுத்த சந்ததி தங்கள் பெற்றோரின் உறவுகள் யாரென்று தெரியாமலே வளர வேண்டிய சூழ்நிலை.

சில உறவுக் குடும்பங்கள் திசைக்கொன்றாய் இருப்பார்கள்.குடும்ப விழாக்கள் என்றால் மட்டும் அழைப்பு வரும்.சிலர் நேரில் வந்து அழைப்பார்கள்.வருஷம் ஒரு முறையோ,நாலைந்து வருஷங்களுக்கு ஒரு முறையோ கூட இப்படியான அழைப்புக்கள் வந்து, விட்டுப்போக இருந்த குடும்ப உறவுகளை தளிர்க்க வைக்கப்பார்க்கும். இந்த மாதிரியான அழைப்புகளுக்குக்கூட போக முடியாத சூழ்நிலை சிலருக்கு அமைந்து விடும்.இதுவே இதுமாதிரியான உறவுக்குடும்பங்களின் கடைசி ஆணிவேரையும் இற்றுப்போகப்பண்ணி விடும்.

இதனால் தலைமுறை இடைவெளி நிரந்தரமாகி விடும்.காலப்போக்கில் உறவுகள் யார்யாரோ என்றாகி விடக்கூடும். சிலர் இருக்கிறார்கள். உறவுகளை விட்டு தொலைதூரத்தில் இருந்தாலும் தங்கள் பிறந்த ஊர்களில் நடக்கிற கோவில் திருவிழாக்களுக்கு எப்படியாவது போய் விடுவார்கள். ஒருவிதத்தில் இது உறவைப் புதுப்பித்துக்கொள்கிற முயற்சி தான்.

இன்னும் சிலர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் வருஷத்தில் பத்து நாளாவது சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள்.பறவைகள் எவ்வளவு உயரத்தில் பறந்து இரை தேடினாலும் தங்கிப்போக தனது கூட்டுக்கு வந்து போகிற மாதிரிதான் இதுவும். இந்த நிலைப்படுத்துதலில் உறவுகள் விட்டுப்போகாமல் தொடரும் வாய்ப்புண்டு.

சிலர் மட்டும் தூரத்தே புலம் பெயர்ந்த நிலையில் உறவுகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பே இல்லாத மாதிரி ஆகி விடுகிறார்கள். இவர்கள் உறவுகளின் எந்த பலமுமின்றி எப்படியோ பேலன்ஸ் செய்து கொண்டு தங்கள் காலில் நிற்கப் பழகி விடுகிறார்கள். இருக்கிற இடத்தைச்சுற்றி முடிந்தவரை ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.இப்படிப் பட்ட நிலையில் உறவு இவர்களுக்கு இரண்டாம் பட்சமாகி விடுகிறது.இப்படிப் பட்டவர்களுக்கும் ஒருவித சிக்கல் இருக்கிறது. உறவுகளை தொலைத்த இவர்களுக்கு அவர்கள் வீட்டுப்பிள்ளைகளின் திருமணம் என்று வரும்போது தங்கள் கவுரவத்தை நிலைநாட்ட உறவுகள் அவசியமாகத் தோன்றுகிறது.

இந்தப் பட்டியலில் உறவுகளின் எந்தப்பின்னணியும் இல்லாமல் தங்களை வளர்த்துக் கொண்டவர்களும் இருப்பார்கள்.இவர்கள் தங்கள் பெருமையை உறவுகளுக்கு பறை சாற்றவாவது தேடிப்போய் தங்கள் இல்ல விழாக்களுக்கு அழைப்பார்கள்.ஒருவர் தனது உறவின் பெருமையை ஊரறிவதைவிட, உறவறிய விரும்புவதன் விளைவே இதற்குக் காரணம்.இந்த சமயத்தில் உறவுகள் பார்க்கும் ஆச்சரியப்பார்வைகள் தான் இவர்களுக்குக் கிடைத்த மகுடம். இப்படி விட்டுப் பிடித்தாலும் பெருமைபெறுவது உறவுகளின் சங்கமத்தில் தான்.அதை இவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

இப்படி தேவைக்கும் பெருமைக்கும் மட்டுமே உறவுகள் வேண்டும் என்பது அத்தனை சரியல்ல. இன்றைய விஞ்ஞான தொழில்நுட்பத்தில் தூரம் ஒரு பொருட்டல்ல. தொலைத் தொடர்பு வசதிகள் சர்வ சாதாரணமாகி விட்ட நிலையில் போன் தொடர்புகள் மூலம் உறவு களை தக்க வைத்துக்கொள்ள முடியும்.அலட்சியமும், அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையுமே உறவுகளை கிடப்பில் போட்டு விடுகின்றன என்பதே நிஜம். நட்பை நேசியுங்கள்.
அதே நேரம் நீங்கள் வேர்களாகவும் கிளைகளாகவும் வெளிப்பட்ட உறவுகளை தொலைத்து விடாதீர்கள்.அங்க அடையாளங்கள் மூலம் உங்களை நீங்கள் அடையாளம் காட்டுவது உலகப்பிரகாரமான அடையாளம்.உறவுகள் வழியாக நீங்கள் வெளிப்படுவது தான் மிகச்சரியான அடையாளம்.


படித்ததில் பிடித்தது

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி