-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Sunday, June 10, 2018

எழுத்து எனும் வேள்வி - நான் என்னால் புகழடையப் போகிறேன்

எழுத்து எனும் வேள்வி - நான் என்னால் புகழடையப் போகிறேன்

என்னை நான் தான் புகழ் பெறச் செய்ய முடியும். என்னை விட என்மேல் அக்கறையும் நலனும் கொண்டவர்கள் யாருமில்லை.  என்னைப் புகழ்பெறச் செய்ய நான் எடுக்கும் முயற்சி தான் “எழுத்து எனும். வேள்வி“

ஒவ்வொரு நிகழ்வும் நம் மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த தாக்கத்தை நாம் பிரதிபலிக்கின்றோம்  சொற்களாக,  செயல்களாக, எண்ணங்களாக அதை நாம் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். நம்மைப் பாதிக்கும் நிகழ்வுகளை நாம் அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டால் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. நாம் உண்மையில் மகிழ்ச்சியாகவே இருப்போம். கிட்டத்தட்ட பற்றற்ற நிலை. ஆம். யார் யாருடனே சண்டையிட்டால் நமக்கென்ன. தேர்தலில் யார் வெற்றி பெற்றால் நமக்கென்ன. துணையும். பிள்ளையும் நம் சொல்படி கேட்காவிட்டால் நமக்கென்ன. பயணத்தில் பக்கத்தில் இருப்பவன் யாருடனோ கேட்கத் தகாத வார்த்தைகளை பேசினால் நமக்கென்ன. இப்படி ஏகப்பட்ட நமக்கென்ன என்று இருந்துவிட்டால், உண்மையில் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் அதுவா வாழ்க்கை. எதற்காகவோ பிறந்து விட்டோம். யாரையும் தொந்தரவு செய்யாமல் வாழவேண்டுமே தவிர யாருக்கும் உபயோகமில்லாமல் வாழக்கூடாது.

சரி இதற்கும் எழுத்துக்களுக்கும் என்ன தொடர்பு?

தொடர்பு உண்டு. எப்படி? நம்முடைய எண்ணங்கள் நம்மை விட்டு வெளியேற வேண்டும். அப்பொழுது தான் மனம் சுத்தமாகும். படிப்பில் நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற எண்ணம் படிப்பு என்கிற செயலாக வெளியே வரவேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உழைப்பாக விடா முயற்சியாக வெளியே வர வேண்டும். ஆனால் நம்முடைய, நம்மைவிட, பலமான எதிரியை அழிக்க நாம் என்ன செயலைச் செய்துவிட முடியும்.  நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலை நமக்குத் தொடர்பில்லாத ஒருவர் செய்யும் பொழுது வரும் உணர்வை நமக்கு துளியளவும் பாதிப்பு ஏற்படாதவாறு எப்படி வெளியேற்ற முடியும்.  அதற்குத்தான் எழுதுங்கள். உங்களின் எண்ணங்களின் வடிகாள் உங்களின் எழுத்து. எண்ணக்குமுரல்களை மனதிலேயே  வைத்திருந்தால் அது ஒரு நாள் வெடித்துச் சிதறி உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளோரையும் அழிக்கக்கூடும்.  அதை அடுத்தவர்களிடம் கூறினால் அதன் பிரதிபலிப்பு உங்களையே வந்தடையும். நீங்கள் எழுதியதை அடுத்தவர்கள் படித்து பாராட்ட வேண்டுமென்பதல்ல அதன் குறிக்கோள். உங்களின் எழுத்து உங்களுக்கு புகழையும் பொருளையும் தரவேண்டுமெனில்  அதை நிச்சயம் வெளிப்படுத்தியே ஆகவேண்டும். ஆனால் இங்கே எழுதுங்கள் என்பது எதையும் பெறுவதற்காக அல்ல. இருப்பதை இழப்பதற்காக. மனதில் உள்ள தீராத காயங்களை கோபங்களை வெறுப்புகளை இப்படி எதையெல்லாம் இழக்க வேண்டுமோ அதைத் தான் எழுதுங்கள். உங்களை நீங்களே துாய்மைப் படுத்திக்கொள்வதற்காகத் தான் இந்த  வேள்வி.

உங்களுடைய கையெழுத்திற்கும் எண்ணங்களுக்கும் தொடர்பு உண்டு. மகிழ்சியான தருணங்களில் உங்களின் கையெழுத்து மற்ற நாட்களைவிட அழகாக இருக்கும். அதேபோல நீங்கள் அழகாக எழுதினால் உங்களின் எண்ணமும் நிச்சயம்  அழகுறும்.  எப்படி எழுதுவது...
எழுதுவதற்குப் பதில் கணினியிலோ அல்லது செல்போனிலோ டைப் செய்து விட்டால் என்ன என்றால் அது தவறு. இங்கே நீங்கள் எழுதுவது உங்களின் கருத்துக்களை பதிவு செய்ய அல்ல. மிக முக்கியமான ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கே குறிப்பிடப்படும் எழுதுதல் என்னும் செயல் திரும்பி வராத பலனைக் கொடுக்கக்கூடிய செயலாக அமைய வேண்டும்.  விதியை அனுபவித்தல் ஒன்றே விதியை வெல்ல மிகச் சரியான வழி. அதனால் உங்களின் எழுத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு அதிக பின்னுாட்டங்களைப் பெற்று விடலாம் என்று எண்ணி விடாதீர்கள். அதுவல்ல நம் நோக்கம். பின்விளைவுகளைத் தராத செயல் தான் வேண்டும்.  நீங்கள் எழுதியதை நீங்களே திரும்பப் படிக்க வேண்டியதில்லை. எழுதி முடித்தவுடன் கிழித்து எரித்து விட வேண்டியது தான். உடனே கிழிக்க மனமில்லையென்றால் சிறிது காலம் யார் கண்ணிலும் படாமல் பாதுகாத்து பின் அழித்து விட வேண்டும்.

உங்களுடைய இந்த எழுத்தை நீங்கள் பாதுகாத்து வைத்திருந்தால் இயற்கை அதற்குரிய பலனை நிச்சயம் தரும். அந்தப் பலன் நற்பலனா? தீய பலனா? என்பது உங்களின் எண்ணங்களைப் பொருத்தது.  நற்பலனை மட்டும் அனுபவிக்க என்ன செய்யக்கூடாது...

விடைகள் ஒவ்வொன்றாக வரும்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி