-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Saturday, June 27, 2020

நம்பிக்கை தன்னம்பிக்கை

அனைத்து பொருள்கள் மீதும் நம்பிக்கை வையுங்கள். அனைவரையும் நம்புங்கள். நம்பிக்கை என்றும் வீண் போகாது. அந்த நம்பிக்கை சிறு குழந்தை தன் தாய் மீது கொண்ட நம்பிக்கை போல அப்பழுக்கற்றதாக முழுமையான நம்பிக்கையாக இருக்க வேண்டும். 

ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் முன்னிலையில் ஒரு ஆறு வயதுச் சிறுமி அமர்ந்திருக்கிறாள். மறுநாள் அவளுக்கு ஒரு சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அவளுடைய பெற்றோர் வெளியே காத்திருக்கிறார்கள். 

''பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்லைம்மா. நீ எதுக்கும் கவலைப்படாத. நான் இருக்கேன். பாத்துக்கறேன்.''

''ஐயையே! நான் பயப்படல டாக்டர். எனக்கு ஒரு விஷயம் தெரியணும்.''

''சொல்லும்மா.''
''நீங்க என் இதயத்த திறந்து பாப்பீங்க இல்லையா?''
''ஆமாம்மா. இது ஓப்பன் ஹார்ட் சர்ஜரி. இதயத்தைத் திறந்து தான் செய்யணும்.. ஆனா உனக்கு வலிக்கவே வலிக்காது.''
'அதைப் பத்தி எனக்குப் பயமில்லை டாக்டர். எங்கம்மா தினமும் சாமி கும்பிடுவாங்க. ஒரு நாள் சாமி எங்க இருக்காருன்னு கேட்டேன். உன் இதயத்துக்குள்ள இருக்காருன்னு சொன்னாங்க. நீங்க என் இதயத்தைத் திறந்தா சாமியப் பாப்பீங்கல்ல? சாமி எப்படி இருக்காருன்னு எனக்குச் சொல்றீங்களா?''

திகைத்துப் போன அறுவை சிகிச்சை நிபுணர் சிறுமியை இறுக அணைத்துக்கொண்டார்.

மறுநாள் அதிகாலை. 
அறுவை சிகிச்சை தொடங்கியது. அவர் நினைத்ததைவிட சிக்கல்கள் அதிகமாகவே இருந்தன. ஒரு கட்டத்தில் எல்லாம் கைமீறிப் போய்விட்டது. அறுவை சிகிச்சை தொடங்கி நாற்பத்தியைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இதயத்திற்குச் சென்று கொண்டிருந்த ரத்தம் நின்றுவிட்டது.

இனிமேல் அந்தச் சிறுமி பிழைக்கமாட்டாள் என்று தோன்றியது... அறுவை சிகிச்சை செய்த இடத்தைத் தைத்தபின் சிறுமியின் உடலை அவளுடைய பெற்றோரிடம் கொடுக்க வேண்டும். சே, என்ன வாழ்க்கை இது!

அப்போதுதான் முதல் நாள் அந்தச் சிறுமி சொன்னது நினைவிற்கு வந்தது. தன் இதயத்திற்குள் கடவுள் இருக்கிறார் என்று நம்பினாளே அவள்!

கழற்றத் தொடங்கிய முகமூடியை மீண்டும் அணிந்து கொண்டார். பலவீனமாகத் துடித்துக் கொண்டிருந்த அந்தச் சின்னஞ்சிறு இதயத்தைப் பார்த்துக் கைகூப்பினார்.

''இறைவா நீ இந்த இதயத்தில் இருக்கிறாய் என்று இந்தக் குழந்தை நம்புகிறது. இந்த உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் நான் தோற்றுவிட்டேன். இனி இந்தக் குழந்தை உன் கையில். இவள் வாழ்வதும் சாவதும் உன் கையில். நான் கற்ற கல்வி, இத்தனை ஆண்டுகளில் பெற்ற திறமை அனைத்தையும் உன் திருவடியில் சமர்ப்பிக்கிறேன். இந்தக் குழந்தை இனி உன்னுடையவள்.''

அவர் கண்களில் நீர். 
பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவருடைய உதவியாளர் அலறினார்.

''டாக்டர் இதயம் நல்லாத் துடிக்க ஆரம்பிச்சிருச்சி. பாருங்க ரத்த அழுத்தம் கடகடன்னு ஏறுது.'' 

அறுவை சிகிச்சையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் நிபுணர். அதன்பின் நான்கரை மணி நேரம் சிகிச்சை தொடர்ந்தது. குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இப்போதெல்லாம் அந்த நிபுணர் கோயிலுக்குச் செல்வதில்லை. எப்போதெல்லாம் குருதியில் அமிழ்ந்திருக்கும் மனித இதயத்தைப் பார்க்கிறாரோ அப்போது எல்லாம் கைகூப்பி வேண்டிக்கொள்கிறார்.


இங்கே வென்றது யார். இறைவனா? மருத்துவரா? இருவரும் இல்லை. நம்பிக்கை. குழந்தையின் நம்பிக்கை. 

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி