-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Friday, October 18, 2013

அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு – விதியை மதி வென்றுவிடுமா?

குழந்தை பிறக்கும் நேரத்தை நிர்ணயிப்பது யார்?

குழந்தை தான்.

நம்முடைய முன்வினைப் பயன்படி தான் இப்பிறவியில் நாம் பிறக்கிறோம். தாயும் தந்தையும் கருவிகள் தான். அவர்கள் நிர்ணயிப்பதில்லை. இன்றைய காலகட்டத்தில் அறுவைச்சிகிச்சையின் மூலம் குழந்தைப் பிறப்பு என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் குழந்தையின் பிறந்த நேரத்தை முன்கூட்டியே நிர்ணயம் செய்து நல்ல நேரம் காலம் பார்த்து குழந்தையை பெற்றெடுக்கின்றனர். இதன் மூலம் குழந்தைக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்துவிட முடியும் என்று எண்ணித்தான் பெற்றோரும் செயல்படுகின்றனர். அவர்களின் எண்ணங்கள் மேலானது தான். ஆனால் அது உண்மையில்லை.

கருவானது தாயின் கருவறையில் நல்ல முறையில் வளர்ந்து போதிய கால இடைவெளியில் தானாகவே தன்னை வெளிப்படுத்துக்கொள்ளும். அப்படி இயலாத நிலையில் தாயின் உடல்நிலையையும் குழந்தையின் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு அறுவைச்சிகிச்சையின் மூலம் குழந்தைப்பிறப்பு நிகழ்கிறது. இதில் தவறில்லை. இதனால் குழந்தையின் விதி நிர்ணயிக்கப்படுகிறதா என்றால் இல்லை. குழந்தை பிறப்பு என்பது ஒரு உயிரின் பிறப்பு ஒரு ஆன்மாவின் அவதாரம். இதை வேறு யாரும் நிர்ணயிக்க முடியாது.

விதியின் விளைவாகவே கரு உருவாகிறது. விதியின் படிதான் வளர்கிறது, வெளிவருகிறது. இந்தக் குடும்பத்தில் இவர்களுக்கு பிள்ளையாகப் பிறந்து இப்படியெல்லாம் வாழப்போகிறோம் என்ற சூழ்நிலை உருவாவது குழந்தைபிறப்பின் போது மட்டுமே நடைபெறும் நிகழ்வல்ல. ஏற்கனவே இறுதிசெய்யப்பட்ட நிகழ்வு. புகழ் பெற்ற மனிதருக்கு பிறந்த குழந்தைகள் வெளி உலகிற்கு தெரியாமல் போவதுண்டு. வெளி உலகத்திற்கு தெரியாமல் உள்ள பெற்றோருக்கு பிறந்த குழந்தைகள் புகழ் பெற்று வாழ்ந்ததும் உண்டு. இது அவர்கள் பிறந்த நேரம் என்று பொதுவாகச் சொல்வதுண்டு. உண்மை தான். ஆனால் அந்த நேரம் யாரும் நிர்ணயித்தது இல்லை.

குழந்தை எந்த நேரத்தில் பிறந்தாலும் அது உண்மையில் நல்ல நேரம் தான். இராகு காலம், அம்மாவாசை, ஆயில்யம் நட்சத்திரம் இது போன்ற காலங்களில் குழந்தை பிறந்தால் அது குழந்தையின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்ற கருத்து முற்றிலும் தவறானது. எல்லா காலமும் நல்ல காலம் தான். வெயில், மழை, காற்று, பனி இப்படி எல்லா காலநிலைகளும் தேவைதான். எந்தக் காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தால் எல்லா காலநிலைகளும் நல்லது தான். அது போலத்தான் ஜோதிடமும். ஒவ்வொரு திசா புத்தி அந்தர காலங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தால் வாழ்க்கை என்றென்றும் திருப்தியாக இருக்கும்.

நன்றி.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி