-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Tuesday, September 18, 2012

ஜோதிடப் பலன்கள் தெரிந்துகொள்ளுவதற்கு முன்

ஜோதிடரின் என்ன கேட்க வேண்டும் எப்படி கேட்கவேண்டும்.

ஜோதிடப் பலன்களை கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ஜோதிடரிடம் செல்லும் போது சில விஷயங்களைத் தெரிந்துவைத்திருப்பது நல்லது. எப்படி கேள்வி கேட்க வேண்டும். என்ன கேள்வி கேட்கவேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும். காரணம் நாம் கேட்கும் கேள்விகளுக்குரிய பதில்கள் தான் கிடைக்கப்பெறுகின்றன என்னும் போது கேள்விகள் தீர்க்கமாக இருக்க வேண்டியது அவசியம்.

எந்த ஒரு செயலும் முழு நம்பிக்கையோடு செய்யும் போது தான் பலன்களை அனுபவிக்க முடிகிறது. நம்பிக்கையில்லாத நிலையில் செய்யும் செயல்கள் எதிர்பார்த்த பலனைத் தருவதில்லை. அதுபோலத் தான் ஜோதிடமும். ஜோதிடம் பார்க்கச் செல்லும் போது ஜோதிடரின் மீதும் ஜோதிடத்தின் மீதும் நம்பிக்கை மிக அவசியம். நம் கேள்விக்குரிய பதிலை இறைவன் இவர் மூலமாகத் தெரிவிக்க இருக்கிறான் என்ற எண்ணம் வரவேண்டும்.

ஜோதிடரிடம் கேட்கக் கூடிய கேள்விகள் நமக்கு உண்மையில் தேவையான ஒன்றாக இருக்கவேண்டும். அது தவிர, ஜோதிடரை குறைகூறும் நோக்கிலோ, ஜோதிடத்தைப் பலிக்கும் நோக்கிலோ அமைவது கூடாது. நீங்கள் உங்கள் நன்மைக்கான கால நேரங்களை அறிவதற்காகத் தான் செல்கிறீர்கள். ஜாதகப் பலன்கள் எவ்வாறு இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நன்றும் தீதும் பிறர் தர வாரா என்பதற்கிணங்க நமக்கு நடக்க இருப்பதற்கு நாமே காரணம் என்று உணர்ந்தால் எதையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வந்துவிடும்.


ஜாதகரைப் பற்றிய கேள்விகள் தான் கேட்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஜாதகம் உண்டு ஒருவரின் ஜாதகம் போல் இன்னொருவருக்கு இருக்காது அதனால் அவர்அவருக்கு என்று தனியாகத்தான் ஜோதிடம் பார்க்கப்படவேண்டும். ஒருவருடைய ஜாதகம் அவருக்குரியது மட்டுமே, அதைவிடுத்து மாமா சித்தப்பா ஒன்றுவிட்ட பெரியப்பா இவர்களுக்கான பலன்களை எதிர்பார்க்கக் கூடாது. எத்தனை சித்தப்பா, எத்தனை மாமா இதுபோன்ற கேள்விகள் தவிர்க்கப் படவேண்டும். ஏன் என்றால் தேவையில்லாத கேள்விகளால் ஜோதிடரின் நேரமும் நம்முடைய நேரமும் வீணாகிவிடுமே தவிர பயனேதும் இருக்கப்போவதில்லை.

அனைத்துக் கேள்விகளுக்கும் ஜோதிடத்தில் பதில் உண்டு. அதற்காக அனைத்துக் கேள்விகளையும் கேட்கக்கூடாது. ஓரிரு கேள்விகள் தான் கேட்கப்பட வேண்டும். அதுதான் ஜோதிடர் மனஒருங்கிணைப்போடு ஒரே சிந்தனையில் பதில் கூற வழிவகுக்கும். ஒரே கேள்வி தானே என்று, எதிர்காலம் எப்படி இருக்கும் என்று மொத்தமாகவும் கேட்கக் கூடாது. உங்களுடைய கேள்வி என்ன என்பதை தெளிவாக கேட்கவேண்டும்.

முடிந்தவரை ஜாதகரை உடன் அழைத்துச் செல்வது நல்லது. தனக்குரிய பலனைத் தெரிந்து கொள்ளக்கூடிய மனோரீதியான பயிற்சியாக இது அமையும். கேள்விகள் எப்படி இருக்கின்றன பதில்கள் எப்படி அமைகின்றன என்று ஜாதகர் உணர்ந்தால் தான் எதிர்காலம் பற்றிய தீர்க்கமான முடிவுக்கு வரமுடியும்.  

ஜோதிடரிடம் ஜாதகத்தைக் கொடுத்த உடனே நாம் வந்திருப்பதனோட நோக்கத்தை அதாவது நம்முடைய தேவையை கூறிவிடவேண்டும். பிரசன்னம் மூலம் நம்முடைய  வருகையின் தேவையை கண்டுவிடலாம் என்றாலும் கூட அது நம் நோக்கமன்று. நம்முடைய கேள்விக்குரிய பதில் தான் வேண்டும். அதனால் தேவைகள் தொடர்பான முக்கிய கேள்வியைக் கேட்க வேண்டும் மற்ற கேள்விகளை வரிசைப்படுத்தி எழுதிவைத்துக்கொள்வது நல்லது. அப்பொழுது தான் நம்முடைய சந்தேகங்கள் தெளிவாகின்றனவா என்பதை உறுதி செய்ய முடியும்.

ஜோதிடர் பலன்களைக் கூறும் போது அமைதியாக கேட்க வேண்டும். தேவைகள் தொடர்பான நியாயமான கேள்விகளை அடுத்தடுத்து கேட்கலாம்.  முடிந்த பிறகு அவருக்கு நன்றி கூறி பின் விடைபெற வேண்டும்.

ஜாதகம் பார்ப்பதற்கான தொகையை முதலிலேயே கொடுத்துவிடுவது சிறந்தது அல்லது குறைந்த பட்சம் அந்தத் தொகையை முன்கூட்டியே தெரிந்து வைத்திருத்தல் நல்லது. பேரம் பேசுவதற்கான இடம் அல்ல. காரணம். பேரம் பேசுவதற்கு இது பொருள் விற்கும் இடமல்ல. முடிந்தவரை அடிப்படை ஜோதிடம் கற்றிருந்தால் ஏன் எதற்கு எப்படி என்ற தேவையான கேள்விகளைக் கேட்கவும் தேவையற்ற கேள்விகளை தவிர்க்கவும் முடியும்.


1 comment:

  1. பெருமதிப்பிற்குரிய ஐயா,
    நான் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தவனாவேன். நான் பிறந்த நேரம்12-07-1982 இரவு 10-45pm என்று எனக்கு ஜாதகம் எழுதியுள்ளனர்.அதன்படி எனக்கு கும்ப லக்கினம்,மீன ராசி ஆகும். ஆனால் கணிப்பொறியில் எனது பிறந்த தேதியை இட்டு பார்த்த பொழுது மீன லக்கினம் மீன ராசி என்று காட்டுகிறது. இவை இரண்டில் எது சரி என்று தாங்கள்தான் விளக்கமளிக்க வேண்டும்.மேலும் அறுவை சிகிச்சை முறையில் பிறந்தவர்களுக்கு ஜாதக பலன்கள் பொருந்துமா?

    நன்றிகளுடன்,
    சுரேஷ்குமார்

    ReplyDelete

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி