-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Tuesday, March 31, 2026

அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி - பாடல் - 51 உருவாய் அருவாய் - விளக்கத்துடன்

கந்தர் அநுபூதி - பாடல் 51 - பாடலும் பொருளும்

   

 

 

 

 

 

 

 

 

 

 

அழைத்தான் வருவான் ஆறுமுகன் என்பார்கள் சிலர். அழைக்காமலே வருவான் அவன் என்பார் சிலர். வேலா என்றால்  வருவான் என்பர் சிலர். மயிலோனே என்றால்  வருவான் என்பார் சிலர். பால குமாரா என்றால் குழந்தையாய் வருவான் முருகன் என்பர் சிலர். 

ஆனால் அருணகிரிநாதரோ எம்பெருமான் முருகனை குருவாக வரவேண்டும் என்று அழைக்கிறார்.  தந்தைக்கே பாடம் சொன்ன முருகன் நமக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வரமாட்டானா? 

கந்தர் அநுபூதி 51ம் பாடலில் குமரக் கடவுளை குருவாய் வரச்சொல்லி கேட்கிறார் அருணகிரியார். 

 

பாடல். 

  உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
   மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
      கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
         குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

 

விளக்கம்.  

உருவாய் - உருவமுள்ளவராக 

அருவாய் - உருவமில்லாதவராக

உளதாய்  -  கண்ணால் காணும் பொருளாக

இலதாய் - கண்ணுக்குத் தெரியாத மெய்ப்பொருளாகவும் 

மருவாய்  - நறுமணம் மிகுந்த பொருளாகவும்

மலராய் - மணத்தைத் தரும் மலர்களாகவும் 

மணியாய் - ஒலிகொடுக்கும் மணியாகவும் , நவரத்தினங்களாகவும் 

ஒளியாய்க் - இருக்கும் பொருளைக் காண உதவும் வெளிச்சமாகவும் 

கருவாய்  - உயிரைத் தாங்கப் போகும் உடல் உருவாகவும் கருவாகவும் 

உயிராய்க்  - உயிராகவும் 

கதியாய் - அடையப்போகும் இடமாகவும் 

விதியாய்க் - நடந்துகொண்டிருக்கும் செயலாகவும் 

குருவாய்  - ஆசானாகவும் 

வருவாய்  - வருக வருக 

அருள்வாய் - அருள்க 

குகனே! -  முருகா

 

முருகா! உன்னை அனைத்து உருவவடிவிலும் பார்க்கிறேன். பாலனாக, குமரனாக, கல்யாண முருகனாக, ஆண்டியாக, இப்படி எல்லா உருவங்களிலும் இருக்கிறாய். அதே சமயம் உன்னை நினைத்து உருகும் போது உருவமில்லாத உணர்வாய் என்னை ஆட்கொள்கிறாய்.  கண்ணில் காணும் பொருளெல்லாம் நீயே. கண்ணால் காண முடியாத மெய்ப்பொருளும் நீயே. 

ஒவ்வொரு உயிரின் கருவாக இருக்கிறாய். அந்தக் கருவிற்குள் இருக்கும் உயிராகவும் இருக்கிறாய் முருகா. ஒவ்வொரு உயிரும் அடைக்கலமாக வேண்டிய மோட்ச கதியாக இருக்கும் முருகா, உன்னை அடைய நாங்கள் செய்யும் செயலாகிய விதியாகவும் நீயே இருக்கிறயாய். எல்லாவற்றிற்கும் மேலாக அந்தச் செயலை நல்வழியில் நடத்தி உன்னை வந்தடைய எங்களுக்கு வழிகாட்டும் குருவாகவும் வந்து எங்களுக்கு வழிகாட்டு இறைவா! முருகா!  எங்களை ஆட்கொண்டு அருளக முருகா என்று அருணகிரிநாதர் முருகனை அழைக்கிறார்.  நாமும் கூடவே சேர்ந்து அழைப்போம். 

 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!!.


No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி